Last Updated : 18 Dec, 2023 05:52 PM

 

Published : 18 Dec 2023 05:52 PM
Last Updated : 18 Dec 2023 05:52 PM

விருதுநகரில் தொடர் கனமழை - வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; பல கிராமங்கள் துண்டிப்பு

விருதுநகரில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக குடியிருப்புப் பகுதிகளை சூழந்துள்ள மழைநீர்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாறுகள், கண்மாய்கள் நிரம்பியதால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் கனமழை: தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்வதையொட்டி விருதுநகர் மாவட்டத்திலும் சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி இன்று முழுவதும் தொடர் மழை பெய்தது. இதனால், காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. தொடர் மழையால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப் பெருக்கு காரணமாக அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால், வெம்பக்கோட்டை, இருக்கன்குடி அணைகளில் இன்று அதிகாலை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆற்றங்கரையோரத்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக அப்பகுதி கிராமங்களில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதோடு, சாத்தூர், இருக்கன்குடி, வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் அணைகள் திறக்கப்பட்டதால் கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டனர்.

வெள்ளப் பெருக்கு: விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி கண்மாய் நிரம்பியதால் கவுசிகா ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், விருதுநகரில் யானைக்குழாய் தெருவில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. அதோடு, ஆற்றில் சுமார் 20 அடிக்கு மேல் தண்ணீர் சென்றதால் யானைக்குழாய் தெரு பொதுமக்கள் பாலத்தைக் கடக்க அனுமதி மறுக்கப்பட்டது. பாலத்தின் இரு புறங்களிலும் போலீஸார் தடுப்புகள் அமைத்ததோடு, பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர். கவுசிகா நதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக குல்லூர் சந்தை அணையும் நிரம்பி வழிந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு நீர் பெருக்கெடுத்து ஓடியதால் குல்லூர் சந்தை தரைப்பாலமும் மூழ்கியது. மேலும், குல்லூர்சந்தை அணையிலிருந்து தண்ணீர் செல்லும் மெட்டுக்குண்டு, சென்னல்குடி, செட்டிபட்டி, மருளூத்து கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அலுவலகப் பணிகள் முடக்கம்: தொடர் மழையால் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தை மழை நீர் சூழ்ந்தது. அதோடு, அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்ததால் அலுவலகத்தில் தரையில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான கோப்புகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. மின்சாரம் முழுவதுமாக நிறுத்தப்பட்டதால் அலுவலகப் பணிகள் அனைத்தும் முடங்கின. அலுவலகத்துக்குள் சுமார் அரை அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் அலுவலர்கள் அனைவரும் வெளியேறினர். மேலும், அலுவலகத்தில் தேங்கிய நீரை வாலிகள் மூலம் பணியாளர்கள் வெளியேற்றினர். அதோடு, அலுவலக வளாகத்திலும் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் மோட்டர் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீர்: தொடர் மழையால் விருதுநகர் கருப்பசாமி நகரிலும் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. தண்ணீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். இதேபோன்று, காட்டாறு வெள்ளம் காரணமாக விருதுநகர் அய்யனார் நகர் பகுதி துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள போலீஸ் பாலம் முழுவதுமாக வெள்ளநீர் மூடியதால் அய்யனார் நகர், கலைஞர் நகர், சிவகாமிபுரம் போன்ற பகுதிகளை நீர் சூழ்ந்தது. இதேபோன்று காட்டாற்று ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்ததால் லட்சுமி நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்தது. அதோடு, விருதுநகரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முழுவதுமாக நீர் சூழ்ந்தது. குளம்போல் மழைநீர் தேங்கியதால் பணிமனையில் வழக்கமான பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. தொழிலாளர்கள் பணிமனைக்குள் சென்றுவர மிகுந்த சிரமப்பட்டனர். மேலும், பணிமனையிலிருந்த தளவாட பொருள்கள் பல மழைநீரில் மூழ்கியதால் சேதமும் ஏற்பட்டது.

போக்குவரத்து நிறுத்தம்: வடலைக்குறிச்சி கண்மாயிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதையொட்டி அப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழ்நிலையால் அப்பகுதியில் வசித்து வரும் 10 குடும்பத்தினர் மீட்கப்பட்டு விருதுநகர் பர்மா காலனியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். இதேபோன்று, விருதுநகர் செங்குன்றாபுரம் அருகே உள்ள எல்லிங்கநாயக்கன்பட்டி கண்மாய் நிறைந்து மறுகால் பாய்ந்தது. எல்லிங்கநாயக்கன்பட்டி- செங்குன்றாபுரம் தரைப்பாலம் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டது. இதனால், எல்லிங்கநாயக்கன்பட்டி, செங்கோட்டை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், செங்குன்றாபுரம்- டி.கல்லுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால், டி.கல்லுப்பட்டி, வில்லூர், வடமலைக்குறிச்சி செல்லும் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஊருக்குள் புகுந்த தண்ணீர்... - தொடர் மழையால் காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமம் முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்தது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால், சாலையில் இரு இடங்களில் உடைப்பு ஏற்படுத்தி தேங்கிய மழைநீரை பொதுமக்கள் வெளியேற்றினர். இதனால், வயல்வெளிகளிலும் மழைநீர் சூழ்ந்து பயிர்கள் சேதமடைந்தன. மேலும், மழையால் வெள்ளிச்சாமி என்பவரது மண்சுவர் வீடும் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அருப்புக்கோட்டை அருகே வக்கணாங்குண்டு, அல்லிக்குளம் கிராமத்தில் மின் கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்தடை அப்பகுதியில் ஏற்பட்டது.

காரியாபட்டி அருகே துலுக்கன்குளம் ஊராட்சியில் காரைக்குளம் கண்மாய் நிறைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மீட்டுவரப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். இதேபோன்று, விருதுநகர் அருகே ஓ.முத்துலாபுரத்தில் கண்மாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறைனர் அங்கு சென்று மழைநீரில் சிக்கித் தவித்த 20 பேரை பாதுகாப்பாக மீட்டுவந்தனர்.

மழை நிலவரம்: இன்று காலை நிலவரப்படி விருதுநகர் மாவட்டத்தில், திருச்சுழியில் 150 மி.மீ, ராஜபாளையத்தில் 136 மி.மீ, காரியாபட்டியில் 81 மி.மீ, ஸ்ரீவில்லிபுத்தூரில் 153 மி.மீ, விருதுநகரில் 126 மி.மீ, சிவகாசியில் 171 மி.மீ, பிளவக்கலில் 142 மி.மீ, வத்திராயிருப்பில் 144 மி.மீ, கோவிலாங்குளத்தில் 167 மி.மீ, வெம்பக்கோட்டையில் 180 மி.மீ, அருப்புக்கோட்டையில் 124 மி.மீ, மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூரில் 203 மி.மீட்டரும் மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் மொத்த சராசரி மழையளவு 124 மி.மீட்டர் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x