

சென்னை: தென் மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதல் மழை பொழிந்துள்ளது. தென்காசியில் 60%, தூத்துக்குடியில் 80% இயல்பைவிட கூடுதல் மழை பொழிந்துள்ளது. இது அதி கனமழையே தவிர மேக வெடிப்பு அல்ல என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (டிச.18) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் இரண்டு தினங்களைப் பொறுத்தவரையில் தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழைபெய்யக் கூடும். அடுத்த 24 மணி நேரத்துக்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது. மேலும், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் ராமநாதபுரத்த்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
டிச.19 (நாளை) குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
44 செ.மீ. மழை பதிவு: வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்.1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 44 செ.மீ. இந்த காலகட்டத்தின் சராசரி அளவு 42 செ.மீ.. இது ஐந்து சதவீதம் இயல்பைவிட அதிகம். தென் மாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழை பொழிந்துள்ளது. தென்காசியில் 60%, தூத்துக்குடியில் 80% இயல்பை விட கூடுதல் மழை பொழிந்துள்ளது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பேசிய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், “டிசம்பர் 14 ஆம் தேதி முதல் நேற்று வரைக்கும் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்தோம். நேற்று காலை அதி கனமழைக்கான வாய்ப்பு குறித்தும் எச்சரிக்கப்பட்டது. வளிமண்டல சுழற்சியில் இருந்து இதுவரை இந்த அளவுக்கு மழை எதிர்பார்த்தது கிடையாது. இது மேக வெடிப்பு கிடையாது. ஒருமணி நேரத்தில் 10 செ.மீக்கும் மேல் மழை பெய்தால் மேக வெடிப்பு எனலாம். ஆனால், நேற்று நாள் முழுவதும் மழை பெய்துள்ளது. இது அதி கனமழை. எனக்கு தெரிந்தவரை இந்த அளவுக்கு அதி கனமழை பரவலாக அனைத்து இடங்களிலும் பெய்தது இல்லை.
தற்போதைய சூழ்நிலையை கணித்தே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பரவலாக அதி கனமழை பெய்துள்ளது. வாய்ப்பு அடிப்படையிலேயே எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. உறுதியாக எதையும் சொல்ல முடியாது. 21 செ.மீக்கு மேல் மழைப் பொழிவு இருக்கும்பட்சத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்படும்.
இனிவருங்காலங்களில் வட கிழக்குப் பருவமழையின்போது இதுபோன்ற தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் (Extreme Precipitation -எக்ஸ்ட்ரீம் பிரிஸிபிடிஷேன்) ஏற்பட வாய்புள்ளது” என்றார்.