Published : 18 Dec 2023 04:49 PM
Last Updated : 18 Dec 2023 04:49 PM

‘ஆதங்கப்படுவதில் பலன் இல்லை’ - தமிழை வழக்காடு மொழியாக மாற்றக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கான ஆக்கபூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் பலன் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பகவத் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மெரினாவில் திருவள்ளுவர் சிலை அருகே டிசம்பர் 20-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளேன். எனவே, இதற்கு அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தேன். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனவே, தனக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழ் வழக்காடு மொழியாக வேண்டுமென்ற மனுதாரரின் எண்ணத்தை பாராட்டுகிறேன். ஆனால் அதற்கு இதுபோன்ற உண்ணாவிரதம் இருப்பது சரியான செயல் இல்லை. சட்ட மொழிகளுக்கு ஏற்ப தமிழ் மொழியில் சரியான சொற்களை கண்டறிய வேண்டும். அதேபோல ஆங்கிலத்தில் உள்ள சட்ட புத்தகங்களை எளிமையான தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மொழிப்பெயர்க்க வேண்டும். தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கான ஆக்கபூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் பலன் இல்லை. நீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்க்க நிதி ஒதுக்குவது மட்டும் போதாது. அடிமட்ட அளவில் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

பின்னர் போராட்டத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக காவல் துறையின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு காவல் துறை தரப்பில், சாகும்வரை உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வேறு எந்த மாதிரியான போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை புதன்கிழமைக்கு (டிச.20) ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x