Published : 29 Nov 2023 04:10 AM
Last Updated : 29 Nov 2023 04:10 AM
மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்று விடுதலையான முருகன் லண்டன் செல்ல பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க அனுமதி கோரிய மனுவுக்கு, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முருகன் உட்பட 7 பேர் உச்ச நீதிமன்றம் உத்தரவால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். முருகனின் பூர்வீகம் இலங்கை என்பதால், அவர் விடுதலைக்குப் பிறகு திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எனக்கும், என் மனைவி நளினிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவால் விடுதலையானோம். நான் முகாமிலும், என் மனைவி, மகள் தனியாகவும் வசித்து வருகின்றனர். என் மகள் லண்டனில் உள்ளார்.
32 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். எஞ்சிய காலத்தில் லண்டனில் மகளுடன் வசிக்க ஆசைப் படுகிறோம். இதற்காக பாஸ்போர்ட் பெறுவதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பிக்கவும், ஆன்லைன் வழியாக இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனு குறித்து வெளி நாடு வாழ் தமிழர் நலத்துறை செயலாளர் மற்றும் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிச.8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT