Published : 06 Nov 2023 04:27 PM
Last Updated : 06 Nov 2023 04:27 PM

‘மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிடுக’ - மெகா கையெழுத்து இயக்கம்

மதுரையில் இன்று ரயில்வே நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்தை சு.வெங்கடேசன் எம்.பி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானம் மற்றும் ரயில்வே காலனி பகுதி நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிடக் கோரி மதுரை ரயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசரடி ரயில்வே மைதானம் முன்பு மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பால்ச்சாமி தலைமை வகித்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, துணை மேயர் தி. நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, திமுக மாமன்ற உறுப்பினர்கள் குழுத்தலைவர் எம். ஜெயராமன், மாமன்ற உறுப்பினர்கள் மகாலட்சுமி அழகுசுந்தரம், வை.ஜென்னியம்மாள், டி. குமரவேல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம்.பி சு.வெங்கடேசன் எம் பி பேசுகையில், ''ரயில்வே மைதானம் மற்றும் ரயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலத்தின் சந்தை மதிப்பு ரூ 1200 கோடிக்கும் அதிகமாகும். இது பல்லாயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கிய மைதானம் ஆகும். இம்மைதானத்தினை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். ரயில்வே காலனி பகுதியில் 1550 மரங்கள் உள்ளது. மதுரை மாநகராட்சி முழுவதும் இருக்கும் மரங்களின் எண்ணிக்கையை விட இந்த சிறிய பகுதிக்குள் இருக்கும் மரங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.

மதுரை மக்களுக்கு சுவாசிக்க நல்ல காற்றையும், சுற்றுச்சூழலை காக்கவும் இந்த பகுதி மிக முக்கிய பங்காற்றுகிறது. எனவேதான் இந்தப் பகுதியை மதுரையின் நுரையீரல் என்கிறோம். தனியார் நிறுவனங்களுக்கு இந்த நிலத்தை தாரைவார்ப்பதென்பது மதுரைக்கு மிகப்பெரும் தீங்கை இழைக்கும் செயலாகும். இதனை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என வழியுறுத்தி இந்த மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்குகிறோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x