Published : 06 Nov 2023 02:56 PM
Last Updated : 06 Nov 2023 02:56 PM

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்க வாய்ப்பு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சூழ்ந்துள்ள மழை நீர். | படம்: எல்.பாலச்சந்தர்

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘தென் இந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (நவ.6), தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .

நவ.7-ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவ.8-ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவ.9-ஆம் தேதி முதல் நவ.12 ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 - 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை நிலவரம்: சேலம், ஈரோடு மாவட்டங்களில் முழுவதும் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தொடர் மழையால் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

நெல்லை நிலவரம்: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மழை பெய்து வருவதால் மானாவாரி நிலங்களில் சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 51 மி.மீ., சேர்வலாறில் 43 மி.மீ., நாலுமுக்கு பகுதியில் 40 மி.மீ., காக்காச்சி பகுதியில் 35 மி.மீ., பாபநாசத்தில் 34 மி.மீ., மாஞ்சோலையில் 25 மி.மீ., சேரன்மகாதேவியில் 3 மி.மீ., களக்காட்டில் 2.40 மி.மீ. மழை பதிவானது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் 96.80 மி.மீ., குண்டாறு அணையில் 49.40 மி.மீ., ஆய்க்குடியில் 25 மி.மீ., கருப்பாநதி அணையில் 20.50 மி.மீ., ராமநதி அணையில் 15.40 மி.மீ., தென்காசியில் 15 மி.மீ., கடனாநதி அணையில் 8 மி.மீ., சிவகிரியில் 5 மி.மீ., சங்கரன்கோவிலில் 3 மி.மீ., அடவிநயினார் அணையில் 2 மி.மீ. மழை பதிவானது.

தொடர்ந்து மழை பெய்தாலும் அணைகளில் நீர்மட்டம் சிறிதளவே உயர்ந்து வருகிறது. நேற்று கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளில் நீர்மட்டம் தலா ஓரடியும், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் தலா முக்கால் அடியும் உயர்ந்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நேற்று மாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

திற்பரப்பு அருவி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மழை ஓய்ந்து வெயிலடித்தது.விடுமுறை தினம் என்பதால் குமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்திருந்தனர். திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுவரை கனமழை பெய்யவில்லை என்ற போதிலும் பரவலாக பெய்து வரும் மழையால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. மானவாரி பயிர்களுக்கு ஏற்ற வகையில் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): குலசேகரன்பட்டினம் 19, சாத்தான்குளம் 3.2, கோவில்பட்டி 10, கயத்தாறு 1, எட்டயபுரம் 27.7, விளாத்திகுளம் 10, வைப்பார் 30, சூரன்குடி 30, வேடநத்தம் 35, கீழ அரசடி 2.

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.77 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 4,773 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 24.34 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 6.23 அடியாகவும், வரட்டுப் பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.74 அடியாகவும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x