Published : 21 Oct 2023 09:31 AM
Last Updated : 21 Oct 2023 09:31 AM
சென்னை: கொளத்தூருக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.84 கோடியில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு திடல் மற்றும் சிறுவர் பூங்காவை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.5.95 கோடி மதிப்பில் 33 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்தார். அப்போது, திரு.வி.க.நகர், பல்லவன் சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.3.30 கோடியில், அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல்தரையுடன் கூடிய கால்பந்து திடலை திறந்து வைத்தார். தொடர்ந்து, திரு.வி.கநகர் 8-வது தெருவில் ரூ. 54.18லட்சத்தில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார்.
ஜவஹர் நகர் 1-வது சர்குலர்சாலையில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில், ஸ்ரீ அகஸ்தியர் அறக்கட்டளை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு கட்டணமில்லா உயர் சிகிச்சை வசதிகளுடன் கூடிய கண் சிகிச்சை மையத்தையும், அக்கட்டிடத்தின் முதல் தளத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தையல் பயிற்சி மையத்தையும் முதல்வர் திறந்துவைத்தார். பின்னர், கொளத்தூர் ஜவகர் நகரில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், பயனாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, தையல் இயந்திரம் என 55 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
திரு.வி.க.நகர் மண்டலம் வி.வி நகர் 1-வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜி.கே.எம் காலனி 27-வது தெருவில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி மையம் மேம்படுத்தும் பணி, ஜவஹர் நகர் 1-வது வட்ட சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் யோகா பயிற்சி மேடை அமைத்தல் உட்பட ரூ.5.95கோடி மதிப்பில் 33 புதிய மேம்பாட்டுபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், நகர் ஊரமைப்பு இயக்குநர் பி.கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT