Published : 09 Oct 2023 05:07 AM
Last Updated : 09 Oct 2023 05:07 AM

திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது; நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கேட்போம்: முதல்வரை சந்தித்த பிறகு கே.பாலகிருஷ்ணன் தகவல்

சென்னை: திமுகவுடன் கூட்டணி தொடர்வதாகவும், நாடாளுமன்ற தேர்தலின்போது அதிக இடங்கள் கேட்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் சந்தித்து வாச்சாத்தி விவகாரம் குறித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், வாச்சாத்தி தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில் உள்ளபடி, பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு, குற்றவாளிகளிடம் இருந்து 50 சதவீதம் தொகையை வசூலிப்பதுடன் அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசு பணி வழங்க வேண்டும். வாச்சாத்தி கிராம மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்.

சம்பவத்தின்போது பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மாவட்ட வன அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்துக்கு 2 ஏக்கர் நிலம், வங்கிக்கடன் உள்ளிட்டவை மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: பாஜக கூட்டணியை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் மக்கள் திரள் மாநாட்டை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று முதல்வரிடம் நினைவூட்டியுள்ளோம். பேசி தீர்மானிக்கலாம் என்று முதல்வர் தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தோம். வரும் அக்.11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இதற்கு மார்க்சிஸ்ட் சார்பில் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளோம்.

திமுகவுடனான கூட்டணி நீடிக்கிறது. ஏற்கெனவே பெற்ற தொகுதிகளை விட குறைத்தா பேசுவோம், அதிகப்படுத்ததானே முயற்சிப்பார்கள். பேச்சுவார்த்தையின்போது எங்களின் கோரிக்கைகள் வைத்து சுமூக முடிவை எட்டுவோம்.

அதிமுகவிடம் இருந்து எங்களுக்கு எந்த அழைப்பும் இல்லை. அதிமுக- பாஜக பிரிந்தாலும், அவர்கள் ஒன்றாக இருந்தபோது எப்படி எதிர்த்து போராடினோமோ, அதே போராட்டம் இப்போதும் தொடரும். கடந்த 9 ஆண்டு கால பாஜக செய்த துரோகத்துக்கு ஆதரவு அளித்துவிட்டு, தற்போது மாறிவிட்டதாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அதிமுக பிரிந்ததால் புனிதமாகிவிட்டது என்று கூற முடியாது. வரும் அக்.13, 14-ம் தேதிகளில் மாநில குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், தேர்தல் பணிகள் தொடர்பாக முடிவெடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x