Published : 31 Aug 2023 06:12 AM
Last Updated : 31 Aug 2023 06:12 AM
சென்னை: நெதர்லாந்து நாட்டு அரசு சார்பில் '1,000 ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை'திட்டத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படுத்த உள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள லிட்டில் ஃபிளவர் கான்வென்டில் நேற்று நடைபெற்றது.
திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தமிழகத்தில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ.40 ஆயிரம் கோடி நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் 1,000 மில்லியன் லிட்டருக்கும் மேலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.
பிற மாவட்டங்களில் 544 கூட்டுக் குடிநீர்திட்டங்கள் மூலம் தினமும் 2,104 மில்லியன்லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 12 மாநகராட்சிகள், 67 நகராட்சிகள், 344 பேரூராட்சிகள் மற்றும் 52,321 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள 4.53 கோடி பேர் பயன்பெறுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் தினமும் 5.36 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 3,122 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள `1000 ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை' திட்டம் மூலம்சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ளதிருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்மாவட்டங்களில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் மேம்படுத்தப்படும். இதன்மூலம் எதிர்காலத்தில் சென்னைக்குத் தேவைப்படும் குடிநீரை முழுமையாக வழங்க முடியும்.
இந்த திட்டத்துக்குத் தேவையான அனைத்து ஒருங்கிணைப்புப் பணிகளும், நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில்முதலீட்டுக் கழகத் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறைச் செயலர் தா.கார்த்திகேயன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், நெதர்லாந்து நாட்டின் துணை தூதர்கள் ஹென்க்ஓவின்க், எவூட் டி விட், ஜெர்மன் நாட்டின் துணை தூதர், மைக்கேல் குச்லெர், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏவாஃபென்னஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT