Published : 31 Aug 2023 05:37 AM
Last Updated : 31 Aug 2023 05:37 AM

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய அனுப்பப்படும் ஆதித்யா விண்கலத்தின் ஏவுதல் ஒத்திகை வெற்றி

சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்ப உள்ள ஆதித்யா எல்-1 விண்கலன். (அடுத்த படம்) விஞ்ஞானி நிகர் சாஜிபடம்: பிடிஐ

சென்னை: சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக அனுப்பப்படும் `ஆதித்யா எல்-1' விண்கலத்தின் ஏவுதலுக்கான ஒத்திகை ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டுகிறது. இதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

இதில், சோலார் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ஸ்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட சாதனங்கள் இடம்பெற்றுள்ளன.

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, 1,475 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ என்ற பகுதியில் விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இங்குதான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சரிசமமாக இருக்கும். எனவே, அங்கிருந்தபடி சூரியனின் வெளிப்புறப் பகுதி வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்டவை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆதித்யா விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செப். 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, விண்கலத்தை ஏவுவதற்கான ஒத்திகை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து, ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சூரியன் குறித்த ஆராய்ச்சிக்கு இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவை மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. இந்த திட்டம் வெற்றி பெற்றால், அந்த வரிசையில் இந்திய 4-வது இடத்தைப் பெறும்.

வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இந்த விண்கல வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெருமை சேர்த்த தமிழர்கள்: அறிவியல் ஆராய்ச்சிக்காக மட்டும் இதுவரை சந்திரயான்-1, 2, 3, மங்கள்யான் மற்றும் அஸ்ட்ரோசாட் ஆகிய 5 விண்கல ஏவுதல் திட்டங்களை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. இவற்றில் அஸ்ட்ரோசாட் தவிர்த்து மற்ற 4 விண்கலங்களின் திட்ட இயக்குநர்களாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களே இடம் பெற்றிருந்தனர்.

குறிப்பாக, சந்திரயான்-1 திட்டத்தில் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2 திட்டத்தில் வனிதா, சந்திரயான்-3 திட்டத்தில் வீரமுத்துவேல், மங்கள்யான் திட்டத்தில் அருணன் சுப்பையா ஆகியோர் திட்ட இயக்குநர்களாக திறம்படச் செயலாற்றி, அவற்றின் வெற்றியில் பெரும் பங்களிப்பு வழங்கினர்.

அந்த வரிசையில், சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்-1 விண்கலம் திட்ட இயக்குநராக, தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி செயல்பட்டு வருகிறார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த நிகர் சாஜி, இளநிலை பொறியியல் படிப்பை நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் முடித்துள்ளார்.

ஆதித்யா எல்–1 விண்கலத்தில் உள்ள விஇஎல்சி என்ற தொலைநோக்கி, சூரியனின் ஒளி, நிற மண்டலம், வெளிப்புற அடுக்குகள், வெடிப்புச் சிதறல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்கிறது. இதை பெங்களூருவில் உள்ள வான் இயற்பியல் ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது. இந்தக் குழுவில், மதுரை பேராசிரியர் ரமேஷ் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x