Published : 31 Aug 2023 05:48 AM
Last Updated : 31 Aug 2023 05:48 AM

உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் - பிரக்ஞானந்தாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு

தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்புக்குப் பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் அழைத்துச் செல்லப்பட்ட இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா. படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

அஜர்பைஜானில் நடைபெற்ற ஃபிடே உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினார். இந்தப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றிவாகை சூடினார். உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் நுழைந்த இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

அவருக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பிரக்ஞானந்தாவுக்கு எலெக்ட்ரிக் கார் வழங்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று தாயகம் திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு, தமிழக அரசு சார்பில் சென்னை விமான நிலையத்தில் மேள தாளம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன்
வரவேற்பு அளிக்கப்பட்டது. விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பிரக்ஞானந்தா படித்த வேலம்மாள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பூக்களைத் தூவியும், இனிப்பு வழங்கியும் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை, பெற்றோர் ரமேஷ் பாபு-நாகலட்சுமியுடன் பிரக்ஞானந்தா சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரைப் பாராட்டிய முதல்வர், உலகக் கோப்பை செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி 2-ம் இடம் பிடித்த அவரது சாதனையை ஊக்குவிக்கும் வகையில், ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை மற்றும் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தாளாளர் எம்விஎம்.வேல்முருகன் உடனிருந்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரக்ஞானந்தா செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெற்றோரும் மகிழ்ச்சியடைந் துள்ளனர். அடுத்தடுத்து போட்டிகள் உள்ள நிலையில், சிறிய ஓய்வுக்குப் பிறகு அவற்றில் பங்கேற்க உள்ளேன். இதற்காக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். செஸ் போட்டியில் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியாகவும் விளையாடுங்கள். வெற்றி, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், உங்களது சிறந்த பங்களிப்பைக் கொடுங்கள்” என்றார்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தா செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது, தமிழகத்தில் செஸ் விளையாட்டு வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. உலகக் கோப்பை செஸ் தொடரில் பங்கேற்ற மேக்னஸ் கார்ல்சனுடன், செஸ் விளையாட்டு குறித்து கலந்
துரையாடினேன். உலகக் கோப்பை தொடரில் தங்கம் வெல்லாதது வருத்தமாக இருந்தாலும், வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x