Published : 19 Aug 2023 05:54 AM
Last Updated : 19 Aug 2023 05:54 AM

டாஸ்மாக் பணியாளர்களின் 39 கோரிக்கைகள் நிறைவேற்றம்: பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களின் 39 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பணியாளர் சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த் தைக்குப் பிறகு அமைச்சர் முத்து சாமி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக 21 சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேசியுள்ளோம். ஏற்கெனவே அவர்கள் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக கொடுத்திருந்தனர். துறையின் சார்பில் ஆய்வு செய்து 55 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகள்அவர்கள் கேட்ட வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில கோரிக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மற்ற கோரிக்கைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளோம்.

குறிப்பாக, கட்டிடத்துக்கான வாடகை, இடத்துக்கு இடம் மாறுபடுவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, அந்த வாடகையை ஒழுங்கு செய்து, துறையேஅதற்கான பொறுப்பை ஏற்கும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் அதிகப்படியான வாடகை இருக்கும்போது அதிகாரிகள் பேசித் தீர்வு காண்பார்கள்.

தனி மின் இணைப்பு இல்லாத சூழலில், மின் கட்டணம் அதிகமானால் தொழிலாளர்கள் அதை கட்டும்நிலை இருந்தது. இப்போது, தனித்தனி மீட்டர் பொருத்தப்பட்டு, கட்டணத்தை டாஸ்மாக் நிர்வாகமே கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 3 ஆயிரம் கடைகளில்கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மேலும், 500 கடைகளில் கேமராபொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளிலும் விரைவில் பொருத்தப்படும். அனைத்து கடைகளிலும் பணத்தை வைக்க பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும். கடைகளில் பாட்டில் உடையும்போது அதற்கு விற்பனையாளர்களே பொறுப்பாக இருந்தனர். அதை துறையின் சார்பில் ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக் கான கூட்டுறவு சங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். சில நேரங்களில் கடைகளில் திருட்டு, தீ விபத்து மற்றும் வங்கிக்குசெல்லும்போது வழிப்பறி ஆகியவை நிகழ்வதால், அதற்கான காப்பீடு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். பணியாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்க உள்ளோம். பிரச்சினைகள் ஏற்படும்போது காவல்துறை யினரிடம் தெரிவித்தால், உடனே நடவடிக்கை எடுக்க வழிமுறை தெரிவித்துள்ளோம்.

சிறிய வயதில் அதாவது முதல்முறையாக கடைக்கு வருபவர்களை கண்டறிந்து, குடிப்பழக்கத்தில் இருந்து அவர்களை தடுக்க வேண்டும். அவர்கள் பெயர், கைபேசி எண்ணை பெற்றுத் தந்தால்கவுன்சலிங் வழங்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. குடிப்பழக்கத் தில் இருந்து அதிகமாக திருத்துவதற்கான ஏற்பாடு செய்யும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதுடன், அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.

அனைத்து கடைகளுக்கும் மின்னணு விலைப் பட்டியல் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மதுபானம் வாங்குவது முதல் விற்பனைசெய்யும் வரை கணினி மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விற்பனை ரசீது வழங்கவும் வசதி செய்யப்படுகிறது. ஊதிய உயர்வு குறித்து அடுத்த கூட்டத்தில் பேசவுள்ளோம். மதுபானங்களுக்கு ஒரு ரூபாய்கூட அதிகமாக வாங்கக்கூடாது என்று கண்டிப்பாக தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x