Last Updated : 18 Aug, 2023 08:47 PM

1  

Published : 18 Aug 2023 08:47 PM
Last Updated : 18 Aug 2023 08:47 PM

100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகுக்கு இந்தியா தலைமை தாங்கும் -  ஆளுநர் தமிழிசை பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் ‘‘என் மண் என் தேசம்’’ இயக்கத்தின் ஒரு‌பகுதியாக அமுத மண் கலச ஊர்வலம் மற்றும் மரம் நடும் விழா புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் இன்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்து தேச ஒற்றுமைக்கான ஐந்து உறுதி மொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். முதல்வர் ரங்கசாமி விழாவுக்கு தலைமை தாங்கினார்.

சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ. ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய் ஜெ சரவணன்குமார், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, எம்பி செல்வகணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது: அடிப்படை கட்டமைப்பு ஒரு நாட்டுக்கு மிகவும் அவசியம். இப்பொழுதுதான் முழுமையான கட்டமைப்பை நாம் பெற்று வருகிறோம். இது வரை இந்த நாட்டில் நிகழாத மாற்றங்கள் இப்பொழுது நடந்து வருகிறது.

சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம் என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க இன்று இந்தியாவின் சந்திராயன் நிலவை நெருங்கி விட்டது நமக்கு பெருமை சேர்த்திருக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. பிரதமர் தனது ஒவ்வொரு நொடியையும் இந்தியாவை முன்னேற்றமடைய சிந்திக்கிறார். இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று பல திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள், நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகிற்கு தலைமை தாங்கும் பெருமையை இந்தியா பெறப்போகிறது. இதற்கு இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் சான்று.

வறுமைக் கோட்டிற்குக்கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உலகப் பொருளாதார மையம் அண்மையில் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து இன்று உலகில் மூன்றாவது பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. முதல்வரின் உதவினால் புதுச்சேரி மக்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அனைத்து விதத்திலும் இந்த நாடு முன்னேறி வருகிறது. இதை பொறுத்துக் கொள்ளாமல் சிலர் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள். என்றார்.

முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “மண்ணை பாதுகாப்பது நம்முடைய கடமை. தேசத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் மிக முக்கிய கடமை. நாட்டில் உள்ளவர்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பது தான் சுதந்திர போராட்ட வீரர்களின் எண்ணம். அதற்கு ஏற்றவாரு மத்திய அரசானது பிரதமர் தலைமையில் பல சீரிய திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில், அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை வளமாக இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

உள்கட்டமைப்பை மேம்படுத்துவதின் வாயிலாக நமது நாட்டின் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. உலக நாடுகள் நம் நாட்டை பற்றி உயர்வாக எண்ண வேண்டும் என்றால் நம் நாட்டை பார்த்து வியக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியது மிக அவசியமான ஒன்று.

அதனை மத்திய அரசு இப்போது சிறப்பான திட்டங்களின் மூலம் நல்ல முறையில் செய்து வருகின்றது. நேரடி பணப் பரிமாற்றம் வாயிலாக பணம் செலுத்தும் போது இடைத்தரகர்கள் இல்லாமல் திட்டத்தின் முழு பயனும் பயனாளிகளை சென்றடைகிறது என்பது தான் காரணம். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த தற்சார்புடைய நாடாக மாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உறுதி மொழிகளின் படி செயல்பட்டால் 2047-ம் ஆண்டில் நமது நாடு தன்னிறைவு பெற்ற நாடாக சிறந்த நாடாக மத்திய அரசு எதிர்பார்க்கின்ற ஒரு பெரிய நாடாக மாறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நமது நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெறுகிறது என்று எண்ணும்போது புதுச்சேரி மாநிலமும் அதில் ஒன்றாக இருக்கும். நம்முடைய புதுச்சேரி மாநிலம் ஒரு சிறிய மாநிலமாக இருந்தாலும் பெரிய வளர்ச்சியை தரக்கூடிய மாநிலமாக வளரும். சிறப்பான நிலையை அடையும்.

ஆக்கபூர்வமான திட்டங்களை கொண்டு வருவதற்கும் செயல்படுத்துவதற்கும் எப்பொழுதும் ஆர்வத்துடன் இருக்கின்ற பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x