Published : 15 Aug 2023 04:00 AM
Last Updated : 15 Aug 2023 04:00 AM
கோவை: அரசால் சமூக நீதியை மாணவர்களிடம் கூட கொண்டு சேர்க்க முடியவில்லை என்பது மோசமான விஷயம் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை தேவாங்கபேட்டை மேல்நிலைப் பள்ளி அருகில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டபிறகு செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவித் தொகை கிடைக்காத நிலை இருக்கிறது. இதை மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னது திமுக. அதற்கான ரகசியம் தெரியும் என சொன்னவர் திமுக அமைச்சர். ஒவ்வொரு உயிரிழப்பு ஏற்படும்போது, அதற்கு ஒவ்வொரு வகையான பின்னணி, காரணம் இருக்கிறது. தற்கொலை செய்ய வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள்.
முதல்வர் பொதுவானவர். நீட் தொடர்பாக ஆளுநர் மீது பாய்வதை விட்டு விட்டு, தமிழகத்தில் எத்தனையோ தற்கொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. எல்லா மனித உயிர்களையும் முதல்வர் ஒரே மாதிரி பார்க்க வேண்டும். நாங்குநேரி சம்பவம் என்பது அதிர்ச்சிகரமானது. ஒன்றாக பழகி, விளையாடி சகோதரத்துவத்தை ஏற்படுத்த வேண்டிய வயதில் இந்த சம்பவம் அதிர்ச்சியாக இருக்கிறது.
சமூக நீதி பேசுகின்ற மாநிலத்தில் இளம் வயதில் இருக்கும் மாணவர்கள் இம்மாதிரியாக ஏதோ ஒரு வகையில் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். அது கலையாக இருக்கலாம், சுற்றி இருக்கக்கூடிய நபர்களின் தாக்கமாக இருக்கலாம். தமிழகத்துக்கு இது ஆபத்தானது. அரசால் சமூக நீதியை மாணவர்களிடம் கூட கொண்டு சேர்க்க முடியவில்லை என்பது மோசமான விஷயம்.
பேசுவதற்கும் செயல்படுவதற்குமான வித்தியாசம் இருப்பதால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரிவினையை வைத்து வெறுப்பினை விதைக்கின்ற பல்வேறு விதமான விஷயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன. இதை கவனத்துடன் அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT