Published : 15 Aug 2023 04:45 AM
Last Updated : 15 Aug 2023 04:45 AM

77-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: ஆளுநர், கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாட்டின் 77-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: நமது தேசிய கொடியானது எண்ணற்ற தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தம், வியர்வை மற்றும் தியாகத்தின் விளைவாகும். அவர்களுக்கு நமது சுதந்திர தினத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி ஏற்றி நமது நன்றியை செலுத்துவோம்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: அன்னியர் ஆட்சியில் இருந்து நாடு விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் தருணத்தில், உலகத்துக்கே வழிகாட்டக் கூடிய வல்லரசாக, தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நாளில் தேசத்தின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் அனைவரையும் போற்றுவோம்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இந்திய நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த செம்மல்களை நினைவுகூரும் இந்நாளில், ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தோடு அனைவரும் பயணித்தால்தான் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த நாம், வறுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும். அனைத்தும் நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை விதைத்து வரும் மலிவான அரசியல் நிராகரிக்கப்பட வேண்டும். மதவாத சக்திகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி, நாட்டையும், மக்களையும் பாதுகாப்போம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: விடுதலையின் 77-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும் உணர்ச்சிமிகுந்த, வீரம்செறிந்த விடுதலைத் திருநாள் வாழ்த்துகள்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: இந்திய நாட்டின் பயணம் உயர்வு -தாழ்வு, வலி - மகிழ்ச்சி, அன்பு - வெறுப்பு ஆகியவற்றால் நிறைந்தது. ஆனாலும் அதன் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நல்லரசாக விளங்கும் இந்தியா, வருங்காலங்களில் வல்லரசாக மாற நாம் அனைவரும் இந்நாளில் நம்மை அர்ப்பணிப்போம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அறவழியிலான போராட்டத்தின் மூலம் ஜனநாயகத்தை வென்றெடுத்தவர்கள் நாம் என்ற பெருமையைக் கொண்ட இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர்: சுதந்திரத்துக்காக போராடி தனது இன்னுயிரை அர்ப்பணித்த தியாகிகள் அனைவரையும் நினைவுகூரும் தருணம் இது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், பாமக தலைவர் அன்புமணி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, இந்து முன்னணி மாநில தலைவர் சி.சுப்பிரமணியம், சமக தலைவர் ரா.சரத்குமார், தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் கு.செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் யாதவ், தேசிய முன்னேற்ற கழக தலைவர் ஜி.ஜி.சிவா உள்ளிட்டோரும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x