Published : 15 Aug 2023 04:52 AM
Last Updated : 15 Aug 2023 04:52 AM

ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து புறக்கணிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாணவர்கள் எதிர்காலத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிப்பதுடன், 77-வது சுதந்திர தினத்தையொட்டி இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இன்று, நாம் இந்தியாவின் 77-வது விடுதலை நாளை கொண்டாடுவதே, இதற்காகத் தியாகம் செய்த அனைவரது போராட்டத்துக்கும் தலைவணக்கம் செலுத்துவதற்காகத்தான். போராடிப் பெற்ற விடுதலையை எந்நாளும், எச்சூழலிலும் போற்றிப் பாதுகாப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. விடுதலை பெற்ற இந்தியா, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் இந்தியாவாகத்தான் இருக்கும் என்று பாரதியார் கனவு கண்டார்.

நாட்டின் 77-வது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், சில நாட்களுக்கு முன் சென்னையை சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன் அவரது தந்தை செல்வசேகர் இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி, முன்னோர் இன்னுயிர் ஈந்து நமக்களித்த விடுதலை, எல்லோருக்குமானதா, வசதி படைத்த வெகு சிலருக்கானதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

அரியலூர் அனிதா தொடங்கி இதுவரை பல மாணவர்களின் உயிர்களை நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் இழந்துள்ளோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள், நமது மனச்சாட்சியை உலுக்கி வருகிறது.

ஆளுநர், அரசியல் ரீதியாக திராவிடம், ஆரியம், திமுக, திருவள்ளுவர், வள்ளலார், சனாதனம் பற்றிப் பேசி வருவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அது கபட வேடம் என்பதை அறிந்தே இருக்கிறோம்; ஆரியப் புலம்பலாக ஒதுக்கித் தள்ளுகிறோம். ஆனால், ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமனப் பதவியில் இருக்கும் ஓர் ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித்துறை மீது நடத்தப்படும் சதியாகவே கருதுகிறோம்.

தமிழக மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமைக் குரலை எழுப்பும் ஒரே கட்சி திமுகதான்.

பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும், உயர் கல்வித் துறையைக் குழப்பியும், தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும், தமிழக மாணவர்களை, பெற்றோரை அவர்கள் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை கண்டிக்கிறேன்.

இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

கனமழை காரணமாக ஆளுநர் தேநீர் விருந்து ஒத்திவைப்பு: ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக ஆளுநர் மாளிகையின் பிரதான புல்தரை பகுதி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இன்றும் (ஆக.15 தேதி) இடியுடன் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழையால் விருந்தினர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை கருத்தில்கொண்டு, தேநீர் விருந்தை ஒத்திவைக்க ஆளுநர் மாளிகை முடிவெடுத்துள்ளது. தேநீர் விருந்து நடைபெறுவது குறித்த அறிவிப்பு விருந்தினர்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x