Published : 18 Jul 2023 06:14 AM
Last Updated : 18 Jul 2023 06:14 AM

டெல்லியில் இன்று பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்: அதிமுக, தமாகா, பாமக உள்ளிட்ட 38 கட்சிகள் பங்கேற்கின்றன

புதுடெல்லி/சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உட்பட 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. தேர்தல் குறித்து ஆலோசிக்க கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஓபிஎஸ்.ஸுக்கு அழைப்பில்லை: இந்த சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

இதற்காக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக, தமாகா, பாமக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு வந்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கெனவே டெல்லியில் உள்ளார். பாஜகவுடன் நெருக்கம் காட்டிவந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு ஏதும் வரவில்லை.

பிரதமர் பங்கேற்பு: இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கூட்ட ஒருங்கிணைப்பு பணிகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மேற்கொண்டு வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணிக் கட்சிகள்: இக்கூட்டத்தில் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா, லோக் ஜனசக்தியின் இரு பிரிவுகள், ராஷ்டிரிய லோக் சமதா, நிஷாத், அப்னா தளம், ஜேஜேபி, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, சிவசேனாவின் ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பிரிவு உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் நேற்று கூறியதாவது: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். நாட்டை வலுப்படுத்த நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகள் மத்தியில் நல்லாட்சி நடைபெறுகிறது. ஊழல் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்தியா முன்மாதிரியாக விளங்கியது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பதவி, அதிகாரத்துக்காக ஒன்று சேர்ந்துள்ளனர். அந்த கூட்டணிக்கு வலுவான தலைமை கிடையாது. அந்த கூட்டணியால் எந்த முடிவும் எடுக்க முடியாது. இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

சரத் பவாரை இழுக்க முயற்சி?: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் பாஜக கூட்டணியில் இணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அஜித்பவார் ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த இரு நாட்களாக சரத் பவாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x