Published : 18 Jul 2023 05:52 AM
Last Updated : 18 Jul 2023 05:52 AM

தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள 2 லட்சம் மின் மீட்டர்களை மாற்ற மின்வாரியம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள 2 லட்சம் மின் மீட்டர்களை மாற்றி புதிய மீட்டர்களை பொருத்துமாறு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் மின்விநியோகம் செய்து வருகிறது. இவ்வாறு விநியோகிக்கப்படும் மின்சாரம், மீட்டர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பல மீட்டர்கள் பழுதடைந்து இருப்பதால் சரியான மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க முடியவில்லை. இதனால், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

அத்துடன், குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தினாலும், மீட்டர் பழுது காரணமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்றி தருமாறு மின்நுகர்வோரிடமிருந்து மின்வாரியத்துக்கு ஏராளமான கோரிக்கைகள் சென்றன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள சுமார் 2.06 லட்சம் மீட்டர்களை மாற்றி புதிய மீட்டர்களை மாற்றுமாறு மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு, மின்வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரி மலர்விழி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதில், சென்னை வட்டத்தில் 20,094 மீட்டர்கள், காஞ்சிபுரம் வட்டத்தில் 39,477 மீட்டர்கள், மதுரை வட்டத்தில் 18,278 மீட்டர்கள், திருச்சி வட்டத்தில் 25,868 மீட்டர்கள், திருநெல்வேலி வட்டத்தில் 25,540 மீட்டர்கள் என மொத்தம் 10 வட்டங்களில் 2.06 லட்சம் மீட்டர்கள் பழுதடைந்துள்ளன.

இந்த பழுதடைந்துள்ள மீட்டர்களை உடனடியாக மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த பில் கட்டணத்துக்கு முன்பாக பழுதடைந்துள்ள மீட்டர்களை மாற்ற வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் பாக்கி: இதேபோல், தமிழகம் முழுவதும் 59,600 மின்நுகர்வோர் ரூ.47 கோடி அளவுக்கு மின்கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதில், சென்னை வட்டத்தில் 17,541 பேரும், காஞ்சிபுரம் வட்டத்தில் 23,989 பேரும், திருச்சி வட்டத்தில் 3,127 பேரும், தஞ்சாவூர் வட்டத்தில் 2,751 பேரும், விழுப்புரம் வட்டத்தில் 3,177 பேரும், வேலூர் வட்டத்தில் 3,380 பேரும், திருவண்ணாமலை வட்டத்தில் 1,051 பேர் என தமிழகம் முழுவதும் மொத்தம் 59,600 மின்நுகர்வோர் மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளனர். அவற்றையும் உடனடியாக வசூலிக்குமாறு மின்வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x