Published : 10 May 2022 07:50 AM
Last Updated : 10 May 2022 07:50 AM
காத்மாண்டு: உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். சீனா, நேபாள எல்லையில் உள்ள இதன் உயரம் 8,848 மீட்டர் (29,035 அடி) ஆகும். இதன் உச்சியை அடைந்து பலர் சாதனை படைத்து வருகின்றனர். இந்த சிகரத்தின் மீது ஏறுவோருக்கு வழிகாட்டியாக இருப்பவர் காமி ரிட்டா (52). இவர் 1994-ல் முதன்முதலாக இந்த சிகரத்தில் ஏறினார். கடந்த 2018-ம் ஆண்டு மே 16-ம் தேதி 22-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். இதன்மூலம் அதிக முறை இந்த சிகரத்தை அடைந்த முதல் நபர் என்ற சாதனை படைத்தார்.
இந்நிலையில், காமி ரிட்டா 11 வழிகாட்டிகள் அடங்கிய குழுவினருடன் கடந்த 7-ம் தேதி 26-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார். இந்த தகவலை செவன் சமிட் ட்ரெக்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தவா ஷெர்பா தெரிவித்தார்.
ஆண்டுதோறும் மே மாதம் மலையேறும் சீசன் தொடங்குவது வழக்கம். இதையடுத்து, இந்த சீசனில் மலேயேற்றப் பாதையில் மலையேறுபவர்களுக்கு உதவும் வகையில் இக்குழுவினர் கயிறுகளை பொருத்தி உள்ளனர். இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 316 பேருக்கு நேபாள சுற்றுலாத் துறை அனுமதி வழங்கி உள்ளது.
எவரெஸ்ட் மட்டுமல்லாது, காட்வின் ஆஸ்டன் (கே2), லேட்சே, மனஸ்லு மற்றும் சோ ஓயு ஆகிய சிகரங்களிலும் ரிட்டா ஏறி சாதனை படைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT