Published : 05 Jan 2018 05:38 PM
Last Updated : 05 Jan 2018 05:38 PM

யானைகளின் வருகை 112: கரடிகளால் கடிபடும் கொலக்கம்பை!

இந்த விவகாரத்தைத்தான் கையில் எடுத்துக் கொண்டார் ஜெயச்சந்திரன். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் நடக்கும் சட்டமீறல்களை தடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் 1995-ல் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அதனை விசாரித்துள்ளது. அதில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் சட்டக் கட்டுப்பாடுகளை மீறி எந்த விதப்பணிகளும் செய்யக்கூடாது. அப்படி சட்டமீறல்கள் நடந்தால் அந்த குற்றத்துக்கு மாநிலத்தின் தலைமைச் செயலாளர், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர், நிர்வாக அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்ப்பளித்தும் உள்ளனர்.

இதனை சுட்டிக்காட்டி தமிழக பசுமை இயக்கம் ஊட்டி, நீதிமன்ற படியேற அதிர்ச்சியுற்றனர் வனத்துறையினர். காண்ட்ராக்டருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட, அவர் உடனே ஓடோடி சென்று உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுவிட்டார். அத்தோடு சாலை வேலையைத் தொடர உயர் நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவும் பெற்றுவிட்டார். விளைவு மறுபடியும் சாலை வேலை ஆரம்பிக்கப்பட்டது. மரங்களை வெட்டத் தொடங்கினர்.

இதை முன்னிட்டு அப்போது பேசிய ஜெயச்சந்திரன், ''இந்த விவகாரத்தில் அரசு நிர்வாகமே அலட்சியமாக நடந்து கொள்கிறது. பிரதம மந்திரியின் நிதி, சட்டத்தை மீறுபவர்களுக்கு பயன்படுவதுதான் கொடுமை. எனவேதான் இதற்கு பொதுநல வழக்கு போட்டோம். அதையும் மீறி தற்போது விதிமுறைகள் மீறப்படுவதால் இதன் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர உள்ளோம்!'' என்றார்.

இந்த விவகாரம் நீதிமன்றம் ஏறினாலும், சாலைப் பணிகள் நடந்து முடிந்தன. அதற்காக ஏராளமான மரங்களும் வெட்டப்பட்டன. அதில் மேய்ந்த காட்டு மாடுகளும், யானைகளும் மற்ற வனவிலங்குகளும் எங்கே சென்றன என்பது வனத்துறைக்கே வெளிச்சம். இது நடந்து இன்றைக்கு 12, 13 வருடங்கள் ஆகி விட்டன.

இந்தப் பகுதியில் நடந்த இச்சம்பவங்கள் போலவே கடந்த ஆண்டுகளில் ஏராளமான இடங்களில் நடந்துள்ளன. அங்கெல்லாம் மேய்ந்து கொண்டிருந்த காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் எங்கு சென்றதோ இல்லையோ, நகரப்பகுதிகளில் அவை திரிவது கணக்கில்லாமல் இருக்கிறது. அவை முட்டுவதும், மனிதர்கள் உயிர் இழப்பதும் கூடுதல் ஆகி வருகிறது.

''இந்தக் காட்சிகளை பார்க்கும்போதெல்லாம் ஏற்கெனவே அழிக்கப்பட்ட காடுகளும், போடப்பட்ட ரோடுகளும்தான் நினைவில் ஆடுகிறது!'' என்கிறார் இந்த காட்டு மாடுகளுக்காக பரிந்து பேசும் இபான் அமைப்பின் இயக்குநர் நைஜில் ஓட்டர்.

நகரப் பகுதிகளில் இப்படி காட்டு மாடுகளின் நடமாட்டத்தால் மக்கள் தற்போதெல்லாம் மக்கள் அல்லல்படுகிறார்கள் என்றால் எஸ்டேட் மற்றும் கிராமப் பகுதிகளில் கரடிகளின் ஊடுருவலால் சிக்கி சின்னாபின்னப்படுகிறார்கள் மக்கள். குறிப்பாக குன்னூரிலிருந்து மஞ்சூர் செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொலக்கம்பை சுற்று வட்டார கிராம மக்களின் அன்றாடப் பொழுது கடந்த 15 ஆண்டுகளாகவே கரடிகளுடனே விடிகிறது.

இந்தக் கிராமத்தை சுற்றியுள்ளது மூப்பர் காடு, தைமலை விசு, நெடுகல் கோம்பை, யானைப்பள்ளம், நீராடிப்பள்ளம், பால்மராலீஸ், உலிக்கல், ஆர்சிடியார் பகுதிகளில் 2002-ம் ஆண்டு வரை வனவிலங்குகள் தொல்லை பெரிதாக இருந்ததில்லை. கரடி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட ஊன் உண்ணி விலங்குகள் கூட எப்போதாவது காட்டுக்குள் தென்படும். மனிதர்களைக் கண்டால் சட்டென்று ஓடிப்போய் மறைந்து விடும்.

ஆனால் 2001-ம் ஆண்டில் இப்பகுதியில் அடர்ந்து நிற்கும் சைபர் மரங்கள் எனப்படும் ஒரு வகை மரங்களை வெட்டிக்கொள்ள அரசு நிர்வாகம் சிலருக்கு உத்தரவு வழங்கியது. அதன் விளைவாய், அந்த மரங்கள் பல்லாயிரக்கணக்கில் வெட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து வனவிலங்குகள் ஊருக்குள் வர ஆரம்பித்து விட்டன. பலர் காட்டு யானைகள் துரத்தி விழுந்தடித்து காயத்துடன் தப்பிக்க, சிலர் அதன் காலடியில் சிக்கி மிதிபட்டு இறந்தனர்.

இந்தத் துயரம் ஒருபுறம். மறுபுறம் கரடிகள். அடர்ந்த சோலைக்குள், காய்கனிகள் உண்டு, தேன் பருகி மயங்கியிருந்த அவை திடீர் விருந்தாளியாக ஊருக்குள் வர ஆரம்பித்து விட்டன. பகலில் எஸ்டேட்டிற்குள் வந்து பெண்களை தேயிலை பறிக்க விடாமல் ஓட ஓட விரட்டியதென்றால், இரவில் வீடுகளின் கதவுகளையும் தட்ட ஆரம்பித்தது.

அப்படித்தான் 2004 நவம்பர் மாதத்தில் ஒரு நாள் கொலக்கம்பையிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கக்காச்சி என்ற கிராமத்தின் பாரதி நகர் குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் ஏழெட்டு கரடிகள் வந்து வீட்டுக்கு வீடு தாவியிருக்கின்றன. கூரை மீதெல்லாம் பாய்ந்திருக்கின்றன. பெரும்பான்மையான வீடுகளின் கதவுகளையும் தட்டி இருக்கின்றன. சில கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையவும் முற்பட்டிருக்கின்றன.

அவற்றை கூச்சலிட்டும், தீப்பந்தம் கொளுத்தியும் விரட்டியிருக்கின்றனர் மக்கள். இதன் உச்சகட்டமாக ஒரு கரடி லட்சுமி என்ற பெண்ணின் வீட்டுக்கூரை மீதேறி ஒரு ஓட்டை தூக்கிப் பார்த்திருக்கிறது.

அதைப் பார்த்து கீழே தரையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வர, அவர்கள் மீது கரடிகள் பாய்ந்திருக்கிறது. திரும்பவும் வந்தவர்கள் வீட்டிற்குள் நுழைந்து கதவை தாழிட்டக் கொண்டு கத்தியிருக்கின்றனர். கடைசியில் எதிர்வீட்டுக்காரர்கள் நெருப்புப் பந்தம் மூட்டி கரடிகளை விரட்டியிருக்கிறார்கள்.

இதேபோல் மேல் தைமலை எஸ்டேட் பகுதியில் (கொலக்கம்பையிலிருந்து 6 கிலோமீட்டர் தூரம்) முனியம்மாள் என்ற 55 வயதுப் பெண்மணி விறகு பொறுக்கச் சென்றுள்ளார். அப்போது ஒரு பள்ளத்தில் பதுங்கியிருந்த கரடி இவர் காலை கெட்டியாக பிடித்துக் கொண்டு தோள்பட்டையில் எட்டிப்பிடித்து கடித்திருக்கிறது.

முனியம்மாள் அலற, எஸ்டேட்டில் வேலை செய்தவர்கள் ஓடிவந்து கரடியை விரட்டி, இவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். முனியம்மாள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு கரடி கடித்த இடத்தில் இருபத்தியிரண்டு தையல்கள் போட்டு சிகிச்சை முடித்து திரும்பினார்.

இது நடந்து இரண்டு மாதங்கள்தான். மானார் எஸ்டே் பகுதியிலிருந்து (கொலக்கம்பையிலிருந்து 7 கிலோமீட்டர் தூரம்) ரேசன் வாங்க டவுனுக்கு புறப்பட்டிருக்கிறார் துரை என்பவர். அவர் கையில் தடியும் இருந்திருக்கிறது (பொதுவாக இங்கே கரடித்தொல்லை அதிகம் என்பதால் கிராம மக்கள் அதை விரட்ட குச்சியும் கையுமாக அலைகிறார்கள்). இவர் எஸ்.ஆர்.கே தோட்டம் என்ற பகுதிக்கு வந்த போது அந்தப் பாதை வழியே ஓர் ஓரமாய் ஒரு கரடி தனது இரண்டு குட்டிக் கரடிகளுடன் வந்திருக்கிறது. இவருக்கு அந்த குட்டியோடு வந்த கரடியைப் பார்த்து உதறல்தான். கரடிக்கோ அதை விட உதறல். அது சீற, குட்டிகளோ, பெரிய கரடிக்கு முன்னே பாய்ந்து இவரை நோக்கி வர, இவர் தடியால் குட்டி ஒன்றை ஒரு போடு போட்டுவிட்டார்.

அவ்வளவுதான்.

தாய்க்கரடிக்கு வந்த கோபத்தில் துரை மீது விழுந்து கால்கள், கைகள், நெற்றி என்று கண்டமேனிக்கு பிடுங்கி எடுத்துவிட்டது. இவர் ரத்தத்தில் துவள, அவ்வழியே வந்த பழங்குடிகள் கூப்பாடு போட்டு ஆட்களைத் திரட்டி கரடிகளை விரட்டியிருக்கிறார்கள். துரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, கடிபட்ட இடங்களில் கிட்டத்தட்ட 65 தையல்கள் போடப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல 2004-ம் ஆண்டு இறுதிக்குள் கொலக்கம்பை சுற்று வட்டாரப்பகுதிகளில் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்கள் கரடியால் கடிபட்டிருக்கிறார்கள்.

''கரடி கடித்து லேசான காயம் என்றால் யாரும் ஆஸ்பத்திரிக்கு செல்வதும் இல்லை. அந்த அளவுக்கு பிறகு பழகியும் போய்விட்டது. கொலக்கம்பை ஆஸ்பத்திரியிலும் கரடி கடி வந்தால் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. டாக்டர்கள், செவிலியர்களுக்கும் அது பழகிப்போய் விட்டது மட்டுமல்ல அங்கே சிகிச்சையளிக்கவும் ஆள் இருப்பதில்லை!'' என்று கரடிக் கடி அனுபவங்களை நம்மிடம் அப்போது பகிர்ந்து கொண்டார் இப்பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x