Published : 02 Feb 2022 06:54 AM
Last Updated : 02 Feb 2022 06:54 AM
ஜனவரி 31 அன்று நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021-22 நிதியாண்டு குறித்த பொருளாதார ஆய்வறிக்கையானது, பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பொருளாதாரத்தின் மீட்சிக்கு சிறப்புக் கவனம் கொடுத்துள்ளது. பணவீக்கம், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட சர்வதேச அளவிலான சவால்களை ஆராய்ந்துள்ள இந்த அறிக்கை, அவை மாற்றமின்றித் தொடரும் பட்சத்தில், அடுத்துவரும் 2022-23-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5 சதவீதத்தை எட்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்துள்ளது. பெரும் எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டிருப்பது, உற்பத்திப் பொருட்களை விநியோகிப்பதில் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், ஏற்றுமதி அதிகரிப்பு, உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக அரசு செலவிடும் கூடுதல் தொகை ஆகியவற்றின் காரணமாக இந்தப் பொருளாதார வளர்ச்சியை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையை அது விதைக்கிறது.
நாடு முழுவதும் பெரும் எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டிருப்பது நோய்த் தொற்றுப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதோடு, தொற்றுப் பரவலின் அடுத்தடுத்த அலைகளால் பாதிப்புக்குள்ளாகும் பொருளாதார நடவடிக்கைகளையும் உடனடியாக மீட்டெடுக்க உதவுகிறது. குறிப்பாக, கூட்டாகச் சேர்ந்து பணிபுரியும் தொழில் துறைகளில் தடுப்பூசிப் பாதுகாப்பு மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கைக்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று. அதே நேரத்தில், மொத்த விலைப் பணவீக்கம் இரட்டை எண்களில் உயர்ந்திருப்பதற்கு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, பெட்ரோலிய எரிபொருட்களுக்கு மாற்றாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை ஆதரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட போக்குவரத்துத் தாமதங்கள், சரக்குக் கட்டண உயர்வு, சரக்குப் பெட்டகங்களுக்கான பற்றாக்குறை ஆகியவை இந்தியாவின் ஏற்றுமதி அளவு குறைவதற்குக் காரணமாயின. இந்நிலை இனிவரும் காலத்தில் சரியாகிவிடும். தொழில் துறை உற்பத்தியில், செமி-கண்டக்டர் போன்ற உள்ளீட்டுப் பொருட்களுக்கான தேவை கண்டுணரப்பட்டு அவற்றைச் சரிசெய்வதற்கான முயற்சிகளும் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன. பெருந்தொற்றுக்குப் பிறகு நுகர்வோரின் விருப்பத் தேர்வுகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றங்கள், புவியரசியல் போக்குகள், பருவநிலை மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தியா தனது விநியோகச் சங்கிலியை வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் உணரப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் தொழில் துறையின் வளர்ச்சி பாதிப்பைச் சந்தித்துள்ளது என்றாலும், உற்பத்தியின் அளவுக்கேற்ப அளிக்கப்பட்ட மானியங்களும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினருக்கு வழங்கப்பட்ட அவசர காலக் கடனுதவிகளும் பொருளாதாரத் தேக்க நிலையிலிருந்து தொழில் துறையை விடுவிக்க உதவியுள்ளன.
அரசின் தரப்பிலிருந்து இவ்வாறு தொடர் ஆதரவு அளிக்கப்பட்டால் மட்டுமே தொழில் துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசேர்க்க முடியும் என்பதே பொருளாதார ஆய்வறிக்கை அழுத்தமாக உணர்த்தும் செய்தி. வரி வருமானத்தை மட்டுமே நம்பியிராமல், தனியார் துறை முதலீடுகளும், வங்கிகளின் கடனுதவிகளும் அதிகரிக்கும்பட்சத்தில் அது இன்னும் எளிதில் சாத்தியமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT