Published : 23 Oct 2021 08:26 AM
Last Updated : 23 Oct 2021 08:26 AM
உலகின் மாபெரும் கவிஞர்களில் ஒருவர் இத்தாலியின் தாந்தே. அவரது நினைவின் 700-வது ஆண்டு செப்.13 தொடங்கி இந்த ஆண்டு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, உலகின் செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றான அவரது ‘ட்வைன் காமெடி’ மறுவாசிப்புக்கு வந்திருக்கிறது. 1307-ல் தொடங்கி 1320-ல் எழுதி முடிக்கப்பட்ட இந்தக் காப்பியத்தைத் தமிழில் முழுவதுமாக விரிவான விளக்க உரைகளுடன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் கே.சுப்பிரமணியன்.
பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் என இரு துறைகளிலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ மொழிபெயர்ப்பால் தமிழ் வாசிப்புலகுக்கு அறிமுகமானவர். தமிழ் காப்பிய நடையில் ‘ட்வைன் காமெடி’யை அவர் மொழிபெயர்த்திருப்பது அதன் தனிச்சிறப்பு. அவரது தமிழ்ச் செவ்விலக்கியப் புலமையை மட்டுமின்றி, கத்தோலிக்க கிறித்தவ இறையியல் விளக்கங்கள் குறித்த அவரது உழைப்பையும் எடுத்துச் சொல்கிறது இந்த முத்தொகை.
இதுவரை வெளிவந்திருக்கும் ஆறேழு ஆங்கில மொழிபெயர்ப்புகள், எண்ணிறந்த விளக்க உரைகளின் துணையோடு தமிழுக்கு வந்திருக்கிறார் தாந்தே. ‘நரகம்’, ‘கழுவாய்க்குன்றம்’, ‘மன்னுலகு’ என்று மூன்று தனித் தனி நூல்களாக வெளிவந்திருக்கும் ‘விண்ணோர் பாட்டு’, மொழிபெயர்ப்புக்குச் சவாலானது. தொடர் உருவகங்கள், பல அடிகளுக்கு நீளும் உவமைகள், காட்சிகளைக் கொண்டது. முத்தொகையின் நூறு காதைகளையும் அவற்றின் மூன்றடி அமைப்புக்கு இசைவாக ஆசிரியப் பாக்களாக உருமாற்றியிருக்கிறார் கே.சுப்பிரமணியன். அவரது ஐந்தாண்டு காலப் பேருழைப்பு தமிழுக்குக் கிடைத்த பரிசு.
- செல்வ புவியரசன்
மகாகவி தாந்தே:
விண்ணோர் பாட்டு
(மூன்று தொகுதிகள்)
தமிழில்: கே.சுப்பிரமணியன்
வெளியீடு: விடியல் பதிப்பகம்
கோவை-641 015
தொடர்புக்கு: 9789457941
மொத்த விலை: ரூ.750
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT