Published : 03 May 2024 07:52 AM
Last Updated : 03 May 2024 07:52 AM
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் புறம்பானதாக இருப்பதாக மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இண்டியா கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கிடையில், பாஜகவுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள மகாராஷ்டிராவுக்கு அண்மையில் பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போது அவர் சரத் பவாரை தாக்கி பேசினார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சர்த் பவார் கூறியதாவது:
உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் முற்றிலும் புறம்பாகப் பேசக் கூடிய பிரதமரை இதற்கு முன்னால் நான் கண்டதேயில்லை. என்னையும் உத்தவ் தாக்கரேவையும் தாக்கி பேசுவதில் மட்டுமே மோடி குறியாக இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டிய அவசியம் என்னவென்று யோசித்து பாருங்கள். வேறொன்றுமில்லை ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்கள் கவலையில் மூழ்கியிருப்பதால் கூடுமானவரை மோடி இங்கு வந்து பிரச்சாரம் செய்வதற்கான ஏற்பாடுதான் இது.
அடுத்து, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படும் என்ற பொய்யை சமூக அமைதியைக் குலைத்து பதற்றமான சூழலை உண்டாக்கும் தவறான நோக்கத்தில் பிரதமர் மோடி அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார்.
ஆனால், நாங்கள் அப்படி ஒருபோதும் சொல்லவே இல்லை. இது முற்றிலும் மோடியின் கட்டுக்கதை. அதுமட்டுமில்லாமல், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாத வாரிசுரிமை வரி மற்றும் சொத்து மறுபங்கீடு குறித்தும் பொய்களை மோடி பரப்பி வருகிறார். இவ்வாறு சரத் பவார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT