Last Updated : 28 Jun, 2023 03:17 PM

 

Published : 28 Jun 2023 03:17 PM
Last Updated : 28 Jun 2023 03:17 PM

கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் உயிர் கொல்லியாக மாறி வரும் கெடிலம் தடுப்பணை தண்ணீர்: நிலத்தடி நீர் கடும் மாசு

கடலூர் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றில் உள்ள தடுப்பணை.

கடலூர்: கடலூரில் உள்ள மிகப் பெரிய நீர் நிலைகள் கெடிலம் மற்றும் தென் பெண்ணை ஆறுகள். இவை சில மாவட்டங்களைக் கடந்து கடலூரில் வந்து கடலில் கலக்கிறது. இதில், கெடிலம் ஆறு, 50 ஆண்டுகளுக்கு முன் பெண்ணையாறு போன்று பாசன ஆறாக இருந்தது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு, குப்பைகளை கொட்டுதல் போன்றவற்றால் மாசடைந்து இன்று சூழியல் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கிறது. சீரழிந்து கிடக்கும் இந்த ஆற்றின் ஒரு புறம் கடலூர் மாநகர மக்கள் வசிக்கின்றனர். மறுபுறம் 50க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்கள் உள்ளன.

ஈஐடி பாரி சர்க்கரை ஆலை, அதன் கழிவு நீரை தொட்டி கிராமம் வழியாக சுமார் 50 ஆண்டுகளாக கெடிலத்தில் விட்டு, அது கடலில் கலந்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன், கெடிலம் ஆற்றின் கம்மியம்பேட்டை பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ 7.50 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டப்பட்ட பின், ரசாயன கழிவு கலந்த தண்ணீர் அங்கேயே தேங்கி கிடக்கிறது.

பெரு வெள்ளத்தில் இந்த கழிவு அடித்துச் செல்லப்படுவதும், அதன் பின் கழிவு தேங்கி, நீர் சீர்கேடு அடைவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மொத்தத்தில் கம்மியம் பேட்டையில் உள்ள தடுப்பணை நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையின் அபாயகரமான கழிவுகளை தேக்கி வைக்கும் இடமாக மாறி விட்டது. இந்த தடுப்பணையைச் சுற்றி 5 கி.மீ சுற்றளவுக்கு உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் கருப்பாக மாறி, குடிப்பதற்கும் மற்ற பயன்பாட்டுக்கும் கூட பயனற்றதாக மாறி விட்டது.

குறிப்பிட்ட ஒரு நீரில் ரசாயன ஆக்ஸிஜன் தேவை (chemical oxygen demand), உயிரியல் ஆக்ஸிஜன் தேவை (biological oxygen demand) குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும் என்று நீரியல் வல்லுநர்கள் வரையறை செய்கின்றனர்.இந்த வரையறையைத் தாண்டி, இங்குள்ள நீர் கெட்டுப் போய் விட்டதாக இங்குள்ள நீரை எடுத்து ஆய்வு செய்த பல நிறுவனங்கள் தெரிவித்து விட்டன.

தடுப்பணையில் மீன்கள் அடிக்கடி செத்து மிதப்பதை பார்த்து விட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் சர்வ சாதாரணமாக கடந்து செல்வது, ஒரு சாதாரண விஷயமாகி விட்டது. நெல்லிக்குப்பத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள கால்வாயில் தண்ணீர் குடித்து, கால்நடைகள் இறந்து போன நிகழ்வும் உண்டு.

கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றில் உள்ள
தடுப்பணையில் செத்து மிதக்கும் மீன்கள்.

இதற்கிடையே, ‘இனி, நெல்லிக்குப்பம் நகராட்சி கழிவு நீரை கெடிலம் ஆற்றில் விடுவதில்லை’ என்று அந்த நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், சுற்றுப்புற குப்பைக் கூளங்கள், கழிவுகள் இந்த ஆற்றில் கலந்து கொண்டே இருக்கின்றன.

நெல்லிக்குப்பத்தில் இருந்து தொட்டி வரை சுமார் 10 கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கெடிலம் ஆற்றின் தண்ணீரால் பாழ்பட்டு கிடக்கிறது. கரையோர மக்களுக்கு சொறி, மூச்சுத்திணறல், மயக்கம் போன்றவை அதிகம் வருவதாக அவ்வபோது பெரிதாக பிரச்சினை கிளம்புவதும், உடனே அரசு மருத்துவ முகாம்கள் அங்கு நடைபெறுவதும் வாடிக்கை. அந்த நேரத்தில் அளிக்கப்பட்ட மருத்துவ ஆய்வறிக்கைகள், இங்குள்ள பாதிப்பை உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாமல் இப்படி கெடிலம் ஆறு கெட்டுப் போய், நாளுக்கு நாள் மோசமாகி விஷமாகி விட்டது. ‘சரி செய்து விடலாம்’ என்ற நம்பிக்கையில் போராடிய சமூக நல அமைப்புகளும் சற்றே ஓய்ந்து விட்டன. தடுப்பணையில் தேங்கி நிற்கும் ஆலை கழிவு நீர் சுற்றுப்புற மக்களுக்கு மிகப்பெரிய உயிர் கொல்லியாக மாறி வருகிறது. இதுபற்றி இப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இதுவரையிலும் வாய் திறக்கவில்லை என்பது உச்சகட்ட சோகம்.

நமது ஊர் நல்ல சுற்றுப்புறச் சூழ்நிலையோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் முன்பை விட தற்போது மக்களிடையே அதிகம் ஏற்பட்டுள்ளது. அரசும் உள்ளாட்சி நிர்வாகங்களுடன் கைகோர்த்து தூய்மைப் பணியில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. இந்த தருணத்தில் கெடிலம் ஆற்றில் கழிவு நீர் விடுவதை தடுத்து, உரிய மாற்று வழிகளை செயல்படுத்தினால், கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆற்றை பழைய நிலைக்கு மீட்டு விடலாம்.

மேலை நாடுகளில் எத்தனையோ செத்துப் போன ஆறுகளை நல்ல சூழியல் மேம்பாட்டுடன் உயிர்ப் பித்திருக்கிறார்கள். அரசும் எத்தனை எத்தனையோ திட்டங்களை அறிவிக்கிறது; நடைமுறைப்படுத்துவதாக சொல்கிறது. இந்த தருணத்தில் மிகச் சரியாய் திட்டமிட்டு, இந்த கெடிலம் ஆற்றை மீட்டெடுக்கலாம். இந்தப் பகுதி மக்களின் உள்ளார்ந்த உள விருப்பம் இது; இதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x