Published : 27 Feb 2019 08:16 AM
Last Updated : 27 Feb 2019 08:16 AM

யாரோடும் சேருவதற்குத் தயார் என்றால் என்ன அர்த்தம்?

அதிமுகவுக்கும் தேமுதிக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

பாமக, பாஜக கட்சிகளோடு அதிமுக தொகுதிப் பங்கீட்டை அறிவித்த பிப்ரவரி 19-ம் தேதியே தேமுதிகவோடும் உடன்படிக்கை கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், இரண்டு கட்சிகளுக்கும் இடையே இன்னமும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. தேமுதிக அதிமுகவிடமிருந்து ‘என்ன’ எதிர்பார்க்கிறது என்பதும் அதிமுக எந்த அளவுக்கு சம்மதிக்கப்போகிறது என்பதும்தான் கூட்டணியை முடிவுசெய்யப்போகிறது.

இதற்கிடையில், விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரிக்கப்போனதும், தேமுதிக கூட்டணியில் இணையுமா என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு “உங்கள் நல்ல எண்ணத்துக்குப் பாராட்டுகள்” என்று அவர் பதிலளித்ததும் அதிமுகவுடன் கொஞ்சம் கூடுதலாகப் பேரம் பேசும் வாய்ப்பைத் தேமுதிகவுக்குக் கொடுத்திருக்கிறது. விஜயகாந்தைச் சந்திக்கப் போன காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரும் நல்ல முடிவெடுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டார். விஜயகாந்துடனான ரஜினியின் சந்திப்பும் வெறும் நட்பு அடிப்படையிலான நலம் விசாரிப்பு என்று ரஜினி ரசிகர்கள்கூட நம்பத் தயாரில்லை.

திறந்திருக்கும் கதவுகள்

தமிழகத்தின் பிரதான கட்சிகள் திமுக, அதிமுக மட்டும்தான். அவற்றுக்கு அடுத்த நிலையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகளில் தேமுதிகவும் ஒன்று. தேமுதிக தனியாகத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் அக்கட்சியின் வாக்குவங்கி 2011 தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது. ஆனால், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட போதும் சரி, அதன்பிறகு 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்தபோதும் சரி, அக்கட்சி மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது என்பதையும் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும். அதன் விளைவாகத்தான், மூன்றாவது கூட்டணி என்ற ஆசையை மூட்டைகட்டி வைத்துவிட்டு யாரோடும் கூட்டணி சேரத் தயார் என்று இப்போது தேமுதிக அறிவித்திருக்கிறது.

கட்சி தொடங்கப்பட்ட காலத்தில், திமுக - அதிமுகவுக்கு மாற்று என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டது தேமுதிக. இரண்டு கட்சிகளுக்கும் எதிரான மனநிலையில் இருந்த பலரும் அந்தக் கட்சியை ஆதரிக்க தலைப்பட்டார்கள். தேமுதிக தொடர்ந்து அதே அரசியல் பாதையில் நடைபோடவில்லை என்றாலும், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டதால் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பையும் பெற்றது. ஆனால், ஒரு எதிர்க்கட்சியாக வல்லமையோடு அது செயல்படாதவிதம் 2016 தேர்தலில் மோசமான தோல்விக்கு அதை இட்டுச்சென்றது. இன்று தேமுதிகவின் நிலையை அந்தப் பழைய நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அதை அக்கட்சியும் புரிந்துகொண்டிருக்கிறது. விளைவாக கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது தேமுதிக. “இரண்டு கட்சிகளும் எங்களை அணுகினார்கள். யாரோடு கூட்டு என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை” என்கிறார் பிரேமலதா.

காத்திருக்கும் கட்சிகள்

அதிமுக கிட்டத்தட்ட தன்னுடைய கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுத்துவிட்டது. பாமகவுக்கு ஏழு இடங்கள், பாஜகவுக்கு ஐந்து இடங்கள், என்.ஆர்.காங்கிரஸுக்கு புதுவை என்று அறிவித்துவிட்டிருக்கும் அதிமுக தேமுதிகவுடனான பேச்சை இறுதிசெய்துவிட்டால் அடுத்து தேர்தல் களத்தை நோக்கி நடக்கலாம் என்று எண்ணுகிறது. திமுக, தன்னுடைய கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் எத்தனை இடங்கள் என்பதில் இன்னும் சுமுகத் தீர்வு ஏற்படவில்லை. தேமுதிகவுக்காகத்தான் தோழமைக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதைத் திமுக தள்ளிப்போடுகிறது என்றும் சொல்லலாம். எப்படியும் இரு கட்சிகளும் தேமுதிகவின் முடிவுக்காகக் காத்திருக்கின்றன.

கூட்டணி யாரோடு என்பதை முடிவெடுப்பது ஒரு கட்சியின் சுதந்திரம் என்றாலும், கூட்டணி தொடர்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் அவரது மகன் விஜய் பிரபாகரனும் அள்ளித் தெறிக்கவிடும் வசனங்கள் இன்று அக்கட்சிக்கு அப்பாற்பட்டும் பொதுப் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அதிலும் ‘கேப்டனின் மைந்தர்’ பேசும் ஏகவசன மொழியானது அரசியல் தராதரத்துக்கான புதிய எல்லைகளை தேமுதிக வகுக்கிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது. முக்கியமாக, “யாரோடும் சேருவோம்” என்பதை எந்தக் கூச்சமும் இல்லாமல் தேமுதிகவினரால் சொல்ல முடிவது அரசியல் முற்றிலுமாக வியாபாரமாக மாறிவருவதை வெளிப்படையாக்குகிறது.

காற்றில் பறக்கும் கொள்கை

யாரோடும் போகும் கட்சிக்கு உள்ளபடி கொள்கை என்று என்ன இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. “இது தமிழக சட்டமன்றத் தேர்தல் அல்ல, பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல்” என்கிறார் பிரேமலதா விஜயகாந்த். உண்மையிலேயே அதை உணர்ந்துகொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் என்றாலும், பல விஷயங்களில் கொள்கையளவில் அவற்றுக்கு இடையே பெரிய வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. ஆனால், நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல். இந்தத் தேர்தலில், கூட்டணித் தோழன் திமுகவா அதிமுகவா என்பதல்ல கேள்வி. காங்கிரஸா, பாஜகவா என்பதுதான். இரண்டுமே தேசியக் கட்சிகள்தான். ஆனால், இரண்டுக்கும் இடையே தீர்க்கமான கொள்கை வேறுபாடுகள் உண்டு. மூன்றாம் அணி முயற்சி இல்லை என்று அறிவித்துவிட்ட நிலையில் பாஜக – காங்கிரஸ் இவற்றில் எந்தப் பக்கத்தையும் தேமுதிக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அதை நியாயப்படுத்தவேனும் கொள்கை என்று ஒன்று வேண்டாமா?அதிமுகவுடன் பேரம் பேசுவது, முடியாவிட்டால் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது, இரண்டுக்கான வாய்ப்பையும் தவறவிட்டுவிடாதிருப்பது என்பதை அரசியல் வியூகமாகவே கருதிக்கொண்டிருக்கிறார் பிரேமலதா.

அரசியல் கொள்கையில் முற்றிலும் எதிரெதிர் நிலையிலிருக்கும் காங்கிரஸ், பாஜக கட்சிகளில் யாரை ஆதரிக்கவும் தயார் என்பது கொள்கைவயப்பட்ட அரசியல் அல்ல. ஆதாயத்துக்காக எதையும் இழக்கத் தயார் என்பதை எப்படி அரசியல் என்று சொல்ல முடியும்? அது வியூகம் அல்ல, வெட்கக்கேடு. ஏனைய பலரும்கூட அதை இன்று செய்கின்றனர் – நிறையக் கூச்சத்தோடு, தயங்கி தயங்கி, புதுப் புது நியாயங்களுடன் மக்களை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சத்துடன்! தேமுதிக இவை எதுவும் தேவையில்லை என்று சொல்கிறது; மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x