Published : 24 Apr 2014 02:32 PM
Last Updated : 24 Apr 2014 02:32 PM
நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப் போக வேண்டும் என்று பேசிய பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங்கை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், தியோகர் பகுதியில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிஹார் மாநில மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பேசும்போது "நரேந்திர மோடியை பிரதமராகவிடாமல் தடுப்பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங்காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இடமில்லை. அவர்கள் வசிக்க பாகிஸ்தானில்தான் இடம் கிடைக்கும்" என பேசியிருந்தார்.
இதையடுத்து, கிரிராஜ் சிங் மீது இந்திய கிரிமினல் தண்டனை சட்டப் பிரிவுகள் 153 ஏ, 295 ஏ, 298 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு கைது ஆணை பிறப்பித்து பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று ஜார்கண்ட் போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தனர். ஆனால், அவர் தனது வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. கிரிராஜ் சிங்கை போலீசார் பாட்னாவில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் சில இடங்களில் தேடி வருகின்றனர்.
அதேவேளையில் கிரிராஜ் சிங் தனது சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக பாரதிய ஜனதா தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT