Published : 24 Apr 2023 07:13 AM
Last Updated : 24 Apr 2023 07:13 AM
சென்னை: திருடன் என நினைத்து மெரினாவில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தமேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பாண்டீஸ்வரம், அரக்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (19). அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (22),சஞ்சய் (18). இவர்கள் 3 பேரும் கடந்த 20-ம் தேதி இரவு சஞ்சய்யின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மெரினா கடற்கரைக்கு வந்தனர். முன்னாள் முதல்வர் அண்ணா நினைவிடம் பின்புறம் உள்ள மணற்பரப்பில் நள்ளிரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மறுநாள் அதிகாலை 1.30 மணியளவிலும் அங்கேயே சுற்றித் திரிந்தனர். இவர்களை திருடர்கள் என நினைத்து, அங்கு மணற்பரப்பில் தூங்கிக் கொண்டிருந்த கடை வைத்திருக்கும் வியாபாரிகள் விசாரித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது.
அப்போது கடை வைத்திருக்கும் 8 பேர் சேர்ந்து, இளைஞர்கள் 3 பேரையும் தாக்கினர். இதில்,விக்னேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது நண்பர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து கொலை தொடர்பாக கடை வியாபாரிகள் திருவல்லிக்கேணி பாஸ்கரன் (42), கவுதம் (22), கார்த்திக்(40), பல்லாவரம் ஆறுமுகம் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்குத் தொடர்பாக தலைமறைவாக இருந்த வண்டலூர் வினோத், தி.நகரைச் சேர்ந்த மற்றொரு கவுதம், திருவல்லிக்கேணி பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த நந்திஸ் ஆகிய மேலும் 4 பேரைக் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT