Published : 24 Apr 2023 07:28 AM
Last Updated : 24 Apr 2023 07:28 AM

கிளென் மேக்ஸ்வெல், டூ பிளெஸ்ஸிஸ் அபார ஆட்டம்: ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது பெங்களூரு

ஆர்சிபி வீரர்கள் | படம்: ஐபிஎல்

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது. கிளென் மேக்ஸ்வெல், டூ பிளெஸ்ஸிஸ் ஆகியோர் அபாரமாக விளையாடி அரை சதம் விளாசினர்.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.இதைத்தொடர்ந்து டூ பிளெஸ்ஸிஸுடன் இணைந்த ஷாபாஸ் அகமது 2 ரன்கள் சேர்த்த நிலையில் வீழ்ந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்லும், டூ பிளெஸ்ஸிஸும் அபாரமாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.

டூ பிளெஸ்ஸிஸ் 39 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை பறக்கவிட்டு 77 ரன்களைக் குவித்தார். மஹிபால் லோம்ரார் 8, தினேஷ் கார்த்திக் 16, பிரபுதேசாய் 0, ஹசரங்கா 6, டேவிட் வில்லி 4, விஜய் குமார் வைஷாக் 0, சிராஜ் ஒரு ரன் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி தரப்பில் டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அஸ்வின், யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் ரன் எடுக்காமலேயே, சிராஜ் பந்தில் வீழ்ந்தார்.

இதையடுத்து 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், தேவ்தத் படிக்கலும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். ஜெய்ஸ்வால் 47 ரன்களிலும், தேவ்தத் படிக்கல் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 22 ரன்களிலும், ஷிம்ரன் ஹெட்மயர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வினும், துருவ் ஜுரெலும் அதிரடியாக விளையாட முயன்றனர். 19-வது ஓவரில் 13 ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன.

ஹர்ஷல் பட்டேல் வீசிய 20-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்த அஸ்வின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. இதையடுத்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே சேர்த்த ராஜஸ்தான் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

துருவ் ஜுரெல் 34 ரன்களும், அப்துல் பாசித் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹர்ஷல் பட்டேல் 3, மொகமது சிராஜ், டேவிட் வில்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியைத் தொடர்ந்து பெங்களூரு அணி 7 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது. ராஜஸ்தான் அணியும் 7 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது.

மேக்ஸ்வெல் 1000: பெங்களூரு அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் 1,000 ரன்களைக் குவித்த 5-வது வீரர் என்ற பெருமையை கிளென் மேக்ஸ்வெல் பெற்றார். நேற்றைய போட்டியின் முடிவில் கிளென் மேக்ஸ்வெல் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் 1,005 ரன்கள் குவித்திருந்தார். இந்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும் (6,903 ரன்கள்), ஏ.பி. டிவில்லியர்ஸ் 2-வது இடத்திலும் (4,491 ரன்கள்), கிறிஸ் கெயில் 3-வது இடத்திலும் (3,163 ரன்கள்), ஜாக்கஸ் காலிஸ் 4-வது இடத்திலும் (1,162 ரன்கள்) உள்ளனர்.

போல்ட் 100: ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட்களைச் சாய்த்த வீரர் என்ற பெருமையை ராஜஸ்தான் அணி வீரர் டிரென்ட் போல்ட் பெற்றார். நேற்றைய ஆட்டத்தில் அவர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி 100-வது விக்கெட்டை ஐபிஎல் போட்டிகளில் கைப்பற்றினார்.

பச்சை நிற சீருடையில் பெங்களூரு அணி வீரர்கள்

ஐபிஎல் தொடரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற சீருடையுடன் விளையாடினர். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டது இந்த சீருடைகள். இந்தத் தகவலை பெங்களூரு அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டிலும் ஏதாவது ஒரு போட்டியில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பச்சை நிற சீருடைகளுடன் விளையாடுவதை பெங்களூரு அணி வீரர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நேற்று ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் பச்சை நிற சீருடையில் களமிறங்கினர். பெங்களூரு அணி வீரர்கள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பச்சை நிற சீருடைகள் அணிந்து 'கோ கிரீன்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வருங்கால தலைமுறைகளுக்கு பசுமையான மற்றும் தூய்மையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்றைய ஆட்டம்: ஹைதராபாத்-டெல்லி

இடம்: ஹைதராபாத்; நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x