Last Updated : 28 Jan, 2019 09:41 AM

 

Published : 28 Jan 2019 09:41 AM
Last Updated : 28 Jan 2019 09:41 AM

பிங்க் ரீமேக்: அஜித்துடன் நடிக்கவுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத்குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே.

 2019ம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படப்பிடிப்புக் குழுவினர் படத்தை துவக்க உள்ளனர் .

ஒரு படத்தின் வெற்றிக்கு அந்தப் படத்தின் நடிக, நடிகையர் , தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் முக்கியம் என்று கூறுகிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

 அவர் மேலும் கூறியதாவது:

 அஜித்குமாருடனான எனது நட்பு ,அவர் மறைந்த எனது மனைவி ஸ்ரீதேவியுடன் "இங்கிலீஷ் விங்கிலிஷ்" திரைப்படத்தில் நடிக்கும் போது தொடங்கியது. தனது தாய் மொழியான தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் அஜித் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை அவர் எதேச்சையாக அஜித்குமாரிடம் கூறி உள்ளார்.

நிச்சயமாக என்று கூறிய அஜித், சொன்னபடியே எங்களை தமிழில் படம் தயாரிக்க அழைத்தார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போதே நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு, தற்போது உள்ள சூழ்நிலையில் சமூகத்துக்குத் தேவையான படத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

நாங்கள் தேர்ந்து எடுத்த கதையின் கருத்து மீது ஸ்ரீதேவி மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். அவருடைய கனவை நனவாக்கும் சீரிய முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பது என்னை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது.

அஜித்குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்தப் படத்துடன் நில்லாமல் , ஜூலை 2019 இல் துவங்கி ஏப்ரல் 2020இல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது.

நான் சினிமாவை விரும்பிப் பார்ப்பவன் என்கிற முறையில் ஒரு படத்தைப் பார்ப்பதற்கு முன் அந்தப் படத்தின் போஸ்டர் வாயிலாக அந்தப் படத்தின் நடிக, நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் யார் என்பதை உன்னிப்பாக கவனித்தே முடிவு எடுப்பேன்.

அந்த வகையில் என் படத்துக்கு வரும் ரசிகர்களும் நம்பிக்கையோடு வர திறமையான டீம் வேண்டும் என்று விரும்பினேன். அவ்வாறே அமைந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி.

கதை என்ன பின்னணியில் அமைந்தாலும் இசை அந்த பின்னணிக்கு வலு சேர்க்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன்.அந்த வகையில் என்னை மிகவும் ஈர்த்த இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தனது நடிப்புத் திறமையால் நாடெங்கும் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட வித்யா பாலன் இந்த படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகிறார். அஜித் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும்.

வளர்ந்து வரும் நடிகைகளில் திறமையான ஒருவர் என்று கணிக்கப்படும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் மைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது திறமையான வாதிடும் திறமையால் எல்லோரையும் கவர்ந்த ரங்கராஜ் பாண்டே இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் நடிகராக அறிமுகமாகிறார். இவர்களுடன் அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியாங் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

இந்தப் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் -நீரவ் ஷா. கலை இயக்குநர்- கே கதிர். சண்டை பயிற்சி- திலிப் சுப்புராயன். படத்தொகுப்பு. கோகுல் சந்திரன். நிர்வாக தயாரிப்பு- பி ஜெயராஜ். ஆடை வடிவமைப்பு - பூர்ணிமா ராமசாமி. இன்னமும் இந்தப் படத்தின் தலைப்பு வைக்கப்படவில்லை.

இவ்வாறு போனிகபூர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x