Published : 12 Dec 2023 02:52 PM
Last Updated : 12 Dec 2023 02:52 PM

ரஜினி என்பது பெயர் அல்ல... அது ஒரு தனித்துவ ‘வைப்’! - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு 

அறிமுகமான சமயத்தில் ரஜினிகாந்தும் நினைத்திருக்க மாட்டார், ‘இன்னும் சில ஆண்டுகளில் இந்த தமிழ் திரை உலகின் முடிசூடா மன்னனாக வலம் வருவோம்’ என்று. எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன் இவர்களுடன் ரஜினியை ஒப்பிடுகையில் கொண்டாட ஒன்றுமே இல்லை என்பது போலத்தான் ஆரம்பத்தில் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், மேற்சொன்ன மூவரைவிட அசுர வேகத்தில் ரசிகர்களிடம் ரஜினியை கொண்டு சேர்த்ததில் அவரது ஸ்கின் டோனுக்கு மிக முக்கியப் பங்கு இருந்தது. அதுவரை திரையில் அநியாயத்தை தட்டிக் கேட்க வந்த பலரும் கலரான ஹுரோக்களாக இருந்த நேரத்தில், ரஜினியின் தோற்றம்தான் அவரை தங்களுக்கான தலைவன் என்று இத்தனை ஆண்டுகளாக தூக்கிச் சுமக்க செய்தது.

ரஜினியின் சக போட்டியாளராக இருந்தவர் கமல்ஹாசன். இப்படி ஒரு கடினமான போட்டியாளரோடு போட்டியிட்டு வெல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை நன்கறிந்தவர் ரஜினிகாந்த். அவரால் என்ன சிறப்பாக செய்ய முடிந்ததோ, அதை மட்டுமே செய்தார். அதுதான் அவரது படங்களுக்கான மிகப் பெரிய வசூலையும், லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் வரவேற்பையும் கொண்டு வந்தது. முதன்முதலில் திரையில் நீங்கள் ரஜினிகாந்தைப் பார்த்த தருணம், உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்றால், 90-களுக்கு முன்பு பிறந்த எவரும் நிச்சயம் அந்த அதிசய அனுபவத்தை மறந்திருக்கமாட்டீர்கள். திரையரங்குகள், பிளாக் அண்ட் ஒயிட் டிவியில், செகண்ட் ரிலீஸ் படங்கள் வெளியாகும் தியேட்டர்களில், டூரிங் டாக்கீஸ்கள் அல்லது திருவிழா சமயத்தில் கலர் டிவி டெக் (வி.ஹெச்.எஸ்) இவற்றில் ஏதேனும் ஒன்றில்தான் பார்த்திருப்பர்.

சண்டைக்காட்சி அல்லது பாடல் காட்சியில் அறிமுகமாகும் ரஜினிக்கு கலர் பேப்பர்கள், நியூஸ் பேப்பர்கள், லாட்டரி சீட்டுகளை சிறுசிறு துண்டுகளாக்கி ரசிகர்கள் பறக்கவிடும்போது படம் பார்க்கும் அனைவருக்குமே ரஜினி படத்தின் வைப் கடத்தப்பட்டுவிடும். அதுவும் ஆபரேட்டர் ரூம் வழியாக வீசும் வண்ண ஒளிக்கீற்றின் ஊடே, கிழித்து வீசப்படும் துண்டு காகிதங்களின் பின்னணியில் திரையில் தோன்றும் ரஜினியை நம் மனதுக்குள் ஜொலிக்க வைத்திடும். அந்த உணர்வு மீண்டும் மீண்டும் கண்களையும் மனத்தையும் நிறைக்கும் போதெல்லாம் ரஜினியும் வந்துவிடுவார். கலர் டிவி டெக் எடுத்து படம் ஓட்டும் சமயங்களில், தெருவில் உள்ள மூத்த ரஜினி ரசிகர்கள், தேங்காய் மீது சூடமேற்றி ஆரத்தி எடுப்பார்கள். இப்படியெல்லாம்தான் ரஜினி கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஊரிலும் நுழைந்திருந்தார்.

இங்கு பலரும் டஸ்கி ஸ்கின்டோன்தான் என்பதால் ரஜினியின் நிறம் இங்கிருந்த பலரையும் தனது ரசிகர்களாக வயப்படுத்தி இருந்தது. அதோடு இல்லாமல் அவரது கையில்
அணிந்திருந்த ஒரு செப்பு காப்பும், கழுத்தில் அணிந்திருந்த ஒரு ருத்ராட்சமும், ரஜினிக்கு மட்டுமின்றி, அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் அடையாளமாக மாறின. ஒவ்வொரு படத்திலும் ரஜினிகாந்த் உடை, ஹேர் ஸ்டைல்,கண்ணாடி, பெல்ட், ஷு என அனைத்திலுமே தனக்கான ஸ்டைலை மெருகேற்றிக் கொண்டே இருந்தார். இந்த ஒவ்வொன்றும் அவரது ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. உடைகளில் ரஜினி செய்யாத மாற்றங்களே இல்லை. ஜென்டில்மேன் லுக்காக கருதப்படும் கோட் ஷுட்டை ரஜினி அவருக்கான ஸ்டைலாக மாற்றுவதெல்லாம் வேற லெவலில் இருக்கும். பொதுவாக கோட் ஷுட் அணிபவர்கள் ஃபுல் ஹேண்ட் அணிந்து பட்டன்களை எல்லாம் பூட்டிக்கொள்வது தான் உலக வழக்கம், ஆனால், ரஜினிகாந்த் கோட்டை ஹேண்ட் கஃப்பை மடித்துவிட்டிருப்பார். அதுவே ரஜினிக்கான தனித்துவமான லுக்கை கொடுத்திருக்கும்.

80-களின் ஆரம்பம் வரை சைட் வாகு ஹேர்ஸ்டைலுடன் தோன்றிய ரஜினி ‘ஊர்க்காவலன்’ படத்தில் இருந்து தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருப்பார். வெறும் தலைமுடியை வைத்துக் கொண்டு என்ன செய்து விடப்போகிறார் என பலரும் நினைத்திருப்பர். ஆனால், ரஜினியை தங்களது தலைவனாக ஏற்றுக் கொண்டவர்களை இந்த தலைமுடியை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். எல்லா ஊரிலும், தெருவிலும் இன்று வரை ஏதோ ஒரு ரஜினி ரசிகர் இந்த ஹேர் ஸ்டைலுடன் ரஜினியை நினைவுப்படுத்திக் கொண்டேதான் இருப்பர்.

அதேபோல், எத்தனையோ வகையான பெல்ட்டுகளை ரஜினி அணிந்திருப்பார். ஒரே பேண்டில் இரண்டு பெல்டுகளை அணிவது, சர்ட்டை லெங்கத்தாக்கி, அதன் மேல் பெல்ட் அணிவதென ரஜினி நடத்திய ஸ்டைல் தாக்குதலை யாருமே மறந்திருக்க முடியாது. வழக்கமாக நீட்டாக டிரெஸ் அணிபவர்கள் சாக்கின்ஸ் போட்டு ஷு அணிந்து கொள்வதுதான் மரபு. ஆனால், தனக்கே உரித்தான அந்த ஜிப் ஷுவை அணியும் காட்சிகளில் எல்லாம் பேண்டை ஷுவுக்குள் திணித்து மரபை மண்டியிட வைத்திருப்பார் ரஜினிகாந்த்.

கண்ணாடி, நிச்சயம் ரஜினி அணிந்த கண்ணாடிகளுக்கு என்று ஒரு பிரத்யேக கண்காட்சியே நடத்தலாம். அவ்வளவு வித்தியாசமான கண்ணாடிகளை வேறு எந்த நாயகனும் அணிந்திருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு விதவிதமான கண்ணாடிகளை அணிந்தவர் ரஜினிகாந்தாக மட்டுமே இருக்க முடியும். 'அவர்கள்' தொடங்கி 'ஜெயிலர்' வரை அவர் அணிந்த கண்ணாடிகளின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொட்டிருக்கும்.

ஹீரோக்களாக வருபவர்கள் கண்ணாடி அணிவதை அவர்களது ரசிகர்களுக்குப் பிடித்திருக்கலாம். ஆனால், தனது கண்ணாடியின் இரண்டு பக்கத்திலும் உள்ள ஃப்ரேம்களை இரு கைகளால் பிடித்துக் கொண்டு ஏதாவது ஒரு வசனத்தை பேசியபடி கண்ணாடியை தனது மார்பில் துடைத்து அதை லாவகமாக ஒரு சுழற்று சுழற்றி, ரஜினி அணிவதுதான் அந்த கண்ணாடிக்கே பிடித்திருக்கும் என சொல்லுமளவுக்கு ரஜினிக்கான மாஸ் லுக்கை உருவாக்கியது இந்த கண்ணாடிகள்தான் என்றால் மிகையல்ல.

ஒரு சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் வலம் வந்த நேரத்தில், படத்துக்குப் படம் அவர் அணிகின்ற ஆடைகளுக்காகவே தனி ரசிகப்பட்டாளம் இருந்தது. இப்போதைய தலைமுறை விரும்பி அணியும் எத்தனையோ ஆடைகளின் துவக்கப்புள்ளியாக ரஜினிகாந்தின் ஆடைகள் இருந்துள்ளன. ரவுண்ட் நெக், வீ நெக் டி ஷர்ட் எல்லாம் ரஜினி தனது வின்டேஜ் காலத்திலேயே அணிந்திருப்பார். அனைத்து வகையான ஆடைகளை அவர் அணிந்து நடித்திருந்தாலும், வேட்டி சட்டையில் வந்த ரஜினியையும் கூட ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். கவிக்குயில், எங்கேயோ கேட்ட குரல், முரட்டுக்காளை என படம் முழுக்க வேட்டி அணிந்து ரஜினி நடித்த திரைப்படங்கள் சிறப்பானவை. வெகு காலத்துக்குப் பின்னர் எஜமான் திரைப்படத்தில், ரஜினி மீண்டும் படம் முழுக்கவே வேட்டி சட்டை அணிந்து நடித்திருப்பார்.

இப்படித்தான் ரஜினிகாந்த் தனது துவக்கம் முதலே, தன்னிடம் தனித்துவமாக ரசிகர்கள் கவனித்துப் பாராட்டி மகிழ்ந்து கொண்டாடிய தனது ஸ்டைலான லுக், வசனம் பேசும் தொனி, உடைகள், கண்ணாடி, ஹேர் ஸ்டைலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனக்கான ரசிகப் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

ரஜினியின் கண்ணசைவுக்கும், கை அசைவுக்கும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கிளர்ந்தெழுந்தனர். அவரது திரைப்படங்களும் எந்தவிதமான சர்ச்சைக்கும் இல்லாத வகையில், வெளிவந்தன. அம்மா சென்டிமென்ட், காதல், நகைச்சுவை என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக படங்களையே ரஜினிகாந்த் தேர்வு செய்து நடித்தார். குடும்பத்துடன் பார்க்கும் படங்களாக ரஜினியின் படத் தேர்வுகள் இருந்ததால், ஃபேமிலி ஆடியன்ஸின் ஆதரவும் ரஜினி திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம்வர பேருதவியாக இருந்தது.

கடந்த 1989-ல் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில்தான், ரஜினி அரசியல் ரீதியாக தனது கருத்தைப் பதிவு செய்ததாக கூறப்படுவது வழக்கம். அந்தப் படத்தில் நடிகை ஸ்ரீவித்யா கதாப்பாத்திரத்தைக் குறிப்பிட்டு மறைந்த பெண் தலைவர் ஒருவரைத்தான் ரஜினி எதிர்த்து பேசியதாக கூறப்பட்டு வந்தது. பின்னர், 1995-ம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த ‘பாட்ஷா’ திரைப்பட விழாவில் தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவுகிறது என அவர் பேசிய பேச்சு அப்போது பேசுபொருளானது.

ஆனால், 1996 தேர்தலுக்கு முன்பு நேரடியாகவே ரஜினிகாந்த் அதிமுக ஆட்சியை விமர்சித்து பேட்டி கொடுத்தார். இந்தத் தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது. இறுதியில், 2017-ல் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். 2019-ல், 2021 சட்டமன்றத் தேர்தலே இலக்கு என்றும் ரஜினிகாந்த் கூறினார். ஆனால் 2020-ல் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்து தனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

அரசியல் களத்தில் ரஜினி எதிர்பார்த்தது நிகழாமல் இருக்கலாம். ஆனால், திரையில் ஆபூர்வ ராகங்களில் கேட்டைத் திறந்தபடி ரசிகர்களின் மனதுக்குள் நுழைந்த ரஜினிகாந்த், இன்று வரை,பலரது மனதினுள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் அவர்தான். ரஜினிகாந்த் என்பது வெறும் ஒரு பெயர் அல்ல... அது எக்கால ரசிகர்களும் சிலிர்த்து மகிழக் கூடிய ‘வைப்’. ஆம், அது ஒரு மந்திரச்சொல்!

| இன்று - டிச.12 - ரஜினிகாந்த் பிறந்தநாள் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x