Published : 18 May 2024 07:36 PM
Last Updated : 18 May 2024 07:36 PM

சிங்கப்பூரில் 25,900 பேருக்கு கரோனா பாதிப்பு: மாஸ்க் அணிய அறிவுறுத்தல்

புதுடெல்லி: சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து 25,900 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் பரவல் அதிகரித்து வருவதால், சிங்கப்பூர் மக்கள் அச்சமடைந்துள்ளர்.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது பல நாடுகளில் இயல்புநிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது பற்றி சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “நாட்டில் கரோனா புதிய அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் ஜூன் இறுதியை ஒட்டி உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.இப்போது நாம் புதிய அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்.

வரவிருக்கும் விஷயங்களுக்கு சுகாதார அமைப்பு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு பொதுமக்கள் முகமூடியை அணிய வேண்டும்” என்றார்.

மேலும், சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில், கடந்த வாரத்தில் 13,700 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் (மே 5 முதல் 11 வரை) தற்போது 25,900 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதில் தினமும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது தொற்று வேகமெடுத்து வருவதை உறுதி செய்கிறது. இந்நிலையில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கூடுதல் தடுப்பூசி போடவில்லையெனில் விரைவில் அதை செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவைக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் பொது முடக்கம் அறிவிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x