Last Updated : 19 May, 2024 10:25 AM

36  

Published : 19 May 2024 10:25 AM
Last Updated : 19 May 2024 10:25 AM

வடக்கு Vs தெற்கு... பிளவுவாதம் பேசுகிறாரா மோடி? - ‘மாறும்’ பாஜக தேர்தல் வியூகம்

இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 5-வது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. தென் மாநிலங்களில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வட மாநிலங்களில் மட்டுமே தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தென்னிந்தியாவில் இருப்பவர்கள் உத்தரப் பிரதேச மக்களை இழிவாகப் பேசுகின்றனர். இதை நாம் மறக்கவோ மன்னிக்கவோ கூடாது” எனப் பேசினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, பிளவுவாத அரசியலை மோடி கையிலெடுத்திருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘‘ஒரு நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருகிறீர்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, அதே நகரில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என வாக்குறுதி அளிக்கிறீர்கள். இதன் காரணமாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை பாதியாக குறையும். இப்படி இருந்தால் மெட்ரோ ரயில் திட்டம் எப்படி முன்னேறும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாநில அரசுகள் பல இலவச திட்டங்களை அறிவித்து கடும் நிதி நெருக்கடியில் சிக்குகின்றன’’ என்றார்.

பெண்களுக்குப் பேருந்தில் இலவசப் பயணம் திட்டத்தைத் தொடங்கி வைத்தது தமிழ்நாடு. அதன்பின் இந்தத் திட்டம் பல மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை இந்தியா முழுவதிலும் அமல்படுத்துவதாகக் காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இந்த நிலையில்தான் மோடி இப்படியான விமர்சனத்தை முன்வைத்தார் மோடி.

புரளியைக் கிளப்பும் பிரதமர்: இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “தோல்வி பயம் என்ன செய்யும்? பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள் நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும். இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் -பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும் தூண்டச் செய்யும்” எனக் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மேலும், “10 ஆண்டுகால ஆட்சியில் சாதனைகள் என்று சொல்ல ஏதும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை கொச்சைப்படுத்துகிறார் பிரதமர் மோடி. கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்து வரும் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்த்திருக்கிறார். பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் இல்லை’ எனப் புது புரளியைக் கிளப்பி இருக்கிறார் மோடி. பாஜகவின் பிளவுவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது. பொய்மை உடைபட்டு வெறுப்பு அகலும், இந்தியா (கூட்டணி) வெல்லும்” எனக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா, “தென் மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டதால், தற்போது தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து கருத்து தெரிவித்து வருகிறார் மோடி. தென் மற்றும் வட இந்தியர்களைப் பிரிக்க முயற்சிக்கிறார். ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த மக்களுடனும் நாங்கள் ஒற்றுமையான உறவைக் கொண்டுள்ளோம். அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்” என தன் கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அன்று வேறு பேச்சு!: கடந்த பிப்ரவரி மாதம் மாநிலத்துக்கு முறையாக நிதிப் பங்கீடு செய்யாததைக் கண்டித்து கர்நாடக காங்கிரஸ் டெல்லியில் போராட்டம் நடத்தியது. பிற மாநில தலைவர்களும் கூட போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, “காங்கிரஸ் வடக்கு - தெற்கு எனப் பிரிவினை வாதம் பேசுவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதேபோல், மத்திய அரசின் நிதிப் பங்கீட்டில் தென் மாநிலங்களுக்கு குறைவாக ஒதுக்கப்படுகிறது, வட மாநிலங்களுக்கு அதிகமாகக் ஒதுக்கப்படுகிறது எனப் பிரித்து பார்க்க வேண்டாம் என நிதி அமைச்சர் பேசினார். இந்த நிலையில், தற்போது பிரதமரே ’வடக்கு - தெற்கு’ எனப் பிரிவினைவாதம் பேசியிருக்கிறார்.

மோடி பேச்சின் பின்னணி என்ன?: வட மாநிலங்களில் காங்கிரஸ் வேலைவாய்ப்பு பிரச்சினை, அடிப்படை வசதியின்மை ஆகியவற்றைப் பிரச்சாரத்தில் பேசிவருகிறது. அதற்கு தென்னிந்தியாவை எடுத்துக்காட்டாகவும் கூறுகின்றனர். அங்கு இருக்கும் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுகின்றனர். அதனால், காங்கிரஸ் தென்னிந்தியாவுக்கு நெருக்கமாக இருப்பதாகக் கூறியும், ஆனால், தென்னிந்திய மக்கள் உபி மக்களை இழிவாகப் பேசுவதாகவும் தென் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் மீது வெறுப்பைப் பரப்பப் பொதுக் கூட்டத்தில் மோடி இப்படியான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

குறிப்பாக, காங்கிரஸ் கூறிய வளர்ச்சி ஒப்பீடுகளை இனவாதமாக மாற்றியிருக்கிறார் மோடி. இதனால் இரு குழுக்களிடம் ஏற்படும் விளைவுகள் குறித்து அவர் துளியும் யோசிக்கவில்லை. ஏனென்றால், பாஜக தேர்தல் பிரச்சாரத்தை முதலில் “மோடி கேராண்டி'’ என தொடங்கியது. காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் இஸ்லாமியர்கள் பக்கம் பிரச்சாரத்தைத் திருப்பி மதவாதத்தைப் பேசியது பாஜக.

ஆனால், 4 கட்ட தேர்தல் முடிந்த நிலையில், தேர்தலில் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்படும் என சர்வேயில் சொல்லப்பட்டது. இந்த நிலையில், ’’இஸ்லாமியர்களுக்கு எதிராக நான் பேசவில்லை’’ என்றார் மோடி. தற்போது, வட இந்தியாவில் வாக்குகளைப் பெற தேர்தல் வியூகத்தை ’வடக்கு -தெற்கு’ என இனவாதமாக மாற்றியிருக்கிறார் பிரதமர் மோடி.

தவிர, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாட்டிலும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியிலும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ரேபரேலியில் வரும் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது. ராகுலை விமர்சிக்கும் வகையில்தான் “வட இந்தியாவில் வாக்கு செலுத்திவிட்டு தென்னிந்தியாவில் நம்மை பற்றி இழிவாகப் பேசுகின்றனர்” என மோடி கருத்து தெரிவித்தார். இந்தப் பிளவுவாத முயற்சி ரேபரேலியில் போட்டியிடும் ராகுலுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என பாஜக எண்ணுகிறது. மேலும், அது பிற தொகுதிகளிலும் பிரதிபலிக்கும்.

ஆனால், இந்தப் பேச்சு தென்னிந்திய தலைவர்களைக் கொதிப்படைய செய்துள்ளது. ஆனால், இந்தப் பிளவுவாதப் பேச்சு சமூகத்தில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும், தேர்தலில் மக்களிடம் எப்படியான தாக்கத்தை உருவாக்கும் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x