Published : 09 May 2025 06:56 PM
Last Updated : 09 May 2025 06:56 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

வரும் 14.05.2025 புதன்கிழமை, இரவு 11 மணி 20 நிமிடத்தில் குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். நிகழும் விசுவாவசு வருடம், சித்திரை மாதம் 31-ம் தேதி கிருஷ்ண பட்ச துவிதியை திதி, கேட்டை நட்சத்திரம், சிவம் நாமயோகத்தில், கரசை நாமகரணத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் குரு பகவான் குடி பெயர்கிறார். கடந்த ஓராண்டு காலமாக ஸ்திர வீடான சுக்கிரனின் ரிஷப ராசியில் அமர்ந்து சில படிப்பினைகளை சொல்லிக் கொடுத்த குரு பகவான், இப்போது உபய வீடான புதனின் மிதுன ராசியில் 14.05.2025 முதல் 1.06.2026 வரை அமர்ந்து அரசாட்சி செய்வார்.

மேஷம்: குரு பகவான் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சர்ச்சைகள் வந்துபோனாலும் சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். விஐபிகள் அறிமுகமாவார்கள். குருபகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், பூர்வீகச் சொத்துகள் சேரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் விலகும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். குருபகவான் லாபஸ்தானமாகிய 11-ம் இடத்தைப் பார்ப்பதால், சகல வகையிலும் லாபம் உண்டு. காரியத் தடைகள் விலகும். சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும் | முழுமையான பலன்களுக்கு > மேஷம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

ரிஷபம்: குரு பகவான் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிர்த்தவர்கள் விலகிச் செல்வார்கள். ஆளுமைத்திறன் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். மருத்துவச் செலவுகள் குறையும். குருபகவான் 8-வது வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திட்டமிட்டபடி அயல்நாட்டுப் பயணங்கள் கூடி வரும். விசா கிடைக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு 10-வது வீட்டைப் பார்ப்பதால் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்குப் பதவிகள் தேடி வரும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி வரக்கூடும் | முழுமையான பலன்களுக்கு > ரிஷபம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

மிதுனம்: குரு பகவான் பார்வை பலன்கள்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், குழந்தைப்பேறு வாய்க்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டு. பூர்வீகச் சொத்தால் ஆதாயம் உண்டு. மகளுக்கு கல்யாணம் கூடிவரும். குரு பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் ஓரளவு நெருக்கம் உண்டு. வீட்டில் தாமதமான சுபநிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால், எதிர்பார்க்கும் பணம் ஓரளவு வரும். செலவுகளும் உண்டு. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது | முழுமையான பலன்களுக்கு > மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

கடகம்: குருபகவான் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். ஆகவே, தாயாரின் ஆரோக்கியம் சிறக்கும். தாய்வழிச் சொத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. கூடா பழக்க வழக்கம் உள்ளவர்களின் நட்பைத் துண்டிப்பீர்கள். குரு பகவான் 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வழக்குகள் இழுபறியாகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குரு பகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். எனினும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். ஆரோக்கியம் கூடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் | முழுமையான பலன்களுக்கு > கடகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

சிம்மம்: குரு பகவானின் பார்வை பலன்கள்: உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதரர் வகையில் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் முன்னேற்றம் பலரையும் வியக்க வைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். குரு பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் சிறப்பாக முடியும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தந்தை வழிச் சொத்துகளைக் கேட்டு வாங்குவீர்கள்.
உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் இதுவரை உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு விலகி, மனத்தில் புது தெம்பு பிறக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். முடிந்தவரை சேமிக்கவும். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள் | முழுமையான பலன்களுக்கு > சிம்மம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

கன்னி: குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டு. எனினும் வீண் சந்தேகத்தை தவிர்த்து விடுங்கள். குரு, சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் வருத்தம் நீங்கும். அவரின் ஆரோக்கியம் மேம்படும். சிலர், சொந்த வீடு வாங்க வாய்ப்புகள் உண்டு. வங்கிக் கடன் கிடைக்கும். குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வழக்குகள் இருப்பின், அவை உங்களுக்கு சாதகமாகும். பழைய ஆவணங் களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம் | முழுமையான பலன்களுக்கு > கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

துலாம்: குரு பகவானின் பார்வை பலன்கள்: ராசியை குரு பார்ப்பதால், சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியம் மிகச் சிறப்பாக அமையும். தோற்றப் பொலிவு கூடும். தயக்கம் தடுமாற்றம் எல்லாம் நீங்கும். கையில் பணம் புரளும். வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். 3-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், சொத்துச் சேர்க்கை உண்டு. எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பலருக்கும் நகை, ஆபரணங்கள் சேரும். செய்தொழிலில் இருந்து வந்த கடின நிலைகள் மாறும். 5-ம் இடத்தை குரு பார்வையிடுவதால், வெகு காலமாக பிள்ளைப் பாக்கியத்துக்காகக் காத்திருந்த அன்பர்களுக்கு, பிள்ளைப் பேறு கிடைக்கும். பிள்ளைகளால் ஆதாயம், பெருமை வந்து சேரும். வட்டிக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகன வசதி பெருகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள் | முழுமையான பலன்களுக்கு > துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

விருச்சிகம்: குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு பகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தாரின் பூரண ஒத்துழைப்பு, உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதே அளவு விமர்சனங்களும் வரும். எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி நல்லது நடக்கும். அத்தியாவசியப் பொருள்களை வாங்குவீர்கள். குரு பகவான் 4-ம் இடத்தைப் பார்ப்பதால், வீடு பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிதாக பெரிய மனை வாங்குவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். தாய் வழிச் சொத்து கைக்கு வரும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். குருபகவான் 12-ம் இடத்தைப் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு, திடீர்ப் பயணங்கள் கூடி வரும். அதன்மூலம் ஆதாயமும் உண்டு. அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் கூடாது | முழுமையான பலன்களுக்கு > விருச்சிகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

தனுசு: குரு பகவானின் பார்வை பலன்கள்: ராசியை குருபகவான் பார்ப்பதால் அழகு, இளமை கூடும். எதிலும் துல்லியமாக திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள், சஞ்சலங்கள் அனைத்தும் விலகி, புது உற்சாகம் பிறக்கும். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். கவுரவப் பதவிகள் தேடிவரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதிதாக குளம் வெட்டுவது, கிணறு அமைப்பது என்று பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கோயில் குடமுழுக்கு, ஊர் திருவிழா என்று உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். ஏமாற்றங்கள், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள்.உங்களால் பயன் அடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். வீண் பழிகள் விலகும். உங்கள் ராசிக்கு 11-ம் இடமாகிய லாபஸ்தானம் குருவின் பார்வையைப் பெறுவதால் விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணவரவு உண்டாகும் | முழுமையான பலன்களுக்கு > தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

மகரம்: குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிரம்பியிருக்கும். பல வகையிலும் பணவரவு உண்டு. எல்லா விஷயங்களிலும் வெற்றி உண்டு. பேச்சில் நிதானம் பிறக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த சந்தேகம் தீரும். தாம்பத்தியம் இனிக்கும். மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தை குருபகவான் பார்ப்பதால், உத்தியோகத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டு. மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பணிச்சுமை உண்டு என்றாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளுக்குத் தெரியாமல், அலுவலகத்தில் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபட வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றி தலைமையிடத்தில் புகார் கூறும் எண்ணத்தை கைவிடவும். வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும் | முழுமையான பலன்களுக்கு > மகரம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

கும்பம்: குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், புது உத்வேகம் பிறக்கும். விஐபிகளின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். தோற்றப் பொலிவு கூடும். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தை குரு பார்ப்பதால், தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவர் வழிச் சொத்துகள் கைக்கு வரும். இதுவரை வறண்டு கிடந்த பணப்பை, இனி நிரம்பும். சேமிக்கும் அளவுக்கு பொருள் வரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.லாபஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், தொழில்-வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். புது முதலீடுகள் செய்வீர்கள். புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப் புடவை, தங்க ஆபரணம் வாங்கிக் கொடுப்பீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள். உங்கள் மீது இருந்த வீண் பழியும் அகலும் | முழுமையான பலன்களுக்கு > கும்பம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

மீனம்: குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால், பயணங்கள் உண்டு. அவற்றால் ஆதாயமும் ஏற்படும். எல்லா வகையி லும் செல்வாக்கு அதிகரிக்கும். குருபகவான் 10-ம் இடத்தைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சிலருக்கு வேறு நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். 12-ம் இடத்தை குருபகவான் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு உண்டு. எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எல்லா வகையிலும் வெற்றி அடையும் யோகம் கூடிவரும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம் | முழுமையான பலன்களுக்கு > மீனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x