

ரிஷபம்: நன்றி மறவாத குணமும், நலிந் தோருக்கு நல்லதே செய்யும் உள்ளமும் கொண்ட நீங்கள் தளராத மனங்கொண்டவர்கள். (திருக்கணிதப் படி) மே 14 முதல் உங்கள் ராசிக்கு, 2-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். இதுவரை ஜென்ம குருவாக இருந்துகொண்டு, சகல வகைகளிலும் பிரச்சினைகளையும், காரியத்தடைகளையும் கொடுத்து வந்த குருபகவான், இப்போது அவர் 2-ம் இடத்துக்கு வருவதால், நிம்மதி பிறக்கும். தடைகள் விலகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தேக ஆரோக்கியம் கூடும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்களுடன் உரசல் போக்கு நீங்கும்.
வீட்டில் உங்கள் ஆலோசனையை ஒரு பொருட்டாகவே மதிக்காத நிலை இருந்தது; முயற்சிகளில் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதைதான். இனி இந்த அவலநிலைகள் அனைத்தும் மாறும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உறவினர்கள் தேடி வருவார்கள். சமூகத்திலும் அந்தஸ்து கூடும். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
குரு பகவான் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிர்த்தவர்கள் விலகிச் செல்வார்கள். ஆளுமைத்திறன் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். மருத்துவச் செலவுகள் குறையும்.
குருபகவான் 8-வது வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திட்டமிட்டபடி அயல்நாட்டுப் பயணங்கள் கூடி வரும். விசா கிடைக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு 10-வது வீட்டைப் பார்ப்பதால் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்குப் பதவிகள் தேடி வரும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி வரக்கூடும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: குரு பகவான் உங்களின் சப்தமாதி பதியும் விரயாதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை செல்வதால் கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சொத்து வாங்குவீர்கள். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குரு பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை செல்வதால் வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். புது வண்டி வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டு.
குரு பகவான் அஷ்டம - லாபாதிபதியாகி அவரது நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 வரை செல்வதால் வெளிநாட்டு பயணங்கள் உண்டு. ஜாமீன் கையெழுத்திட்டு ஏமாற வேண்டாம். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இளைய சகோதர, சகோதரிகளின் திருமணம் கைகூடி வரும். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் எதிரிகள் அடங்கு வார்கள். பயணங்கள் அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்து விவகாரம் சுமுகமாக முடியும்.
வியாபாரத்தில், வியாபார ஸ்தலத்தை உங்கள் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். கெமிக்கல், கமிஷன், ஹோட்டல், பைனான்ஸ் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் தேடி வருவார்கள்.
உத்தியோகத்தில் குறைகூறிக் கொண்டிருந்த மேலதிகாரி, இனி இணக்கமாவார். அவரது ஆதரவு கிடைக்கும். அதேபோல், பதவி உயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். சில வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையினர், இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள். கலைத் துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும்.
இந்த குரு பெயர்ச்சி திறம்பட செயல்பட்டு இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: சென்னை, பூந்தமல்லி - தக்கோலம் அருகில் இலம்பையங்கோட்டூரில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுங்கள். வாய் பேச முடியாதவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.