

சிம்மம்: எடுத்த காரியத்தையும் உண்ணாமல் உறங்காமல் முடிக்கும் வல்லமையும் கொண்ட நீங்கள், தன்மானத்துடன் வாழ்பவர்கள். உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) மே 14 முதல் 11-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். இதுவரை எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போன்று இருந்த ஒருவித அவஸ்தை நிலை மாறும். குரு பகவான் லாபஸ்தானத்தில் வந்து அமர்வதால், சகல விஷயங்களிலும் நன்மை நடக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள்.
வெளியிடங்களில் முதல் மரியாதை கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் வகையில் உதவிகள் கிடைக்கும். குறிப்பாக மூத்த சகோதரர் வகையில் ஆதாயம் உண்டு. அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் பெருகும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்: உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதரர் வகையில் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் முன்னேற்றம் பலரையும் வியக்க வைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். குரு பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் சிறப்பாக முடியும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தந்தை வழிச் சொத்துகளைக் கேட்டு வாங்குவீர்கள்.
உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் இதுவரை உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு விலகி, மனத்தில் புது தெம்பு பிறக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். முடிந்தவரை சேமிக்கவும். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சுகாதிபதி, பாக்கியாதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் செல்வதால் எல்லா வகையிலும் வெற்றி உண்டு. தள்ளிப்போன விஷயங்கள் (புதுமனை புகுதல், திருமணம்) நல்லபடியாக முடியும். ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் பயணிப்பதால் கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும், அஷ்டமாதிபதியுமான குரு பகவான் அவருடைய நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். அவர்களின் உயர் கல்வி, உத்தியோகம் பொருட்டு, வெளிநாடு செல்வார்கள். பூர்வீக சொத்து விவகாரங்கள் சாதகமாக முடியும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.
குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் திடீர் செலவுகள் வரும். அதற்கேற்ப பணவரவும் உண்டு. குடும்பத்தில் நல்லது நடக்கும். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். யாரையும் விமர்சிக்க வேண்டாம்.
வியாபாரத்தில், புதிய முதலீடுகள் செய்வீர்கள். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களைக் கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உணவு, இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடனான மனத் தாங்கல் விலகும்.
உத்தியோகத்தில் உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். கணினி துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும். கலைத்துறையினருக்கு பரிசு, பாராட்டு கிடைக்கும்.
இந்த குரு பெயர்ச்சி புதிய அணுகுமுறையால் வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகில் தேப்பெருமாநல்லூரில் வீற்றிருக்கும் குருபகவான், ஸ்ரீவிஸ்வநாத சுவாமி உடனுறை ஸ்ரீவேதாந்தநாயகி அம்மனை வியாழக்கிழமைகளில் வழிபடுங்கள். ஏழை மாணவனின் படிப்புக்கு முடிந்த உதவியை செய்யுங்கள். நல்லது நடக்கும்.