

கடகம்: எங்கும் எதிலும் புதுமையையும், புரட்சியையும் செய்யக்கூடிய நீங்கள் உழைப்பால் உயரும் உத்தமர்கள். (திருக்கணிதப்படி) மே 14 முதல், உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். இதுவரை லாப ஸ்தானமாகிய 11-ம் இடத்தில் இருந்துகொண்டு, பல்வேறு வகைகளிலும் சாதகமான நிலையை உருவாக்கிக் கொடுத்தார் குருபகவான். இப்போது அவர், உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் வந்து அமர்கிறார். நிதானத்தை கடைபிடிக்கவும்.
நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் கூட, குடும்ப ரகசியங்களை வெளியே பகிர வேண்டாம். தியானம், யோகப் பயிற்சியில் ஈடுபட்டு மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வக் கோயிலின் விழாக்களை, திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
குருபகவான் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். ஆகவே, தாயாரின் ஆரோக்கியம் சிறக்கும். தாய்வழிச் சொத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. கூடா பழக்க வழக்கம் உள்ளவர்களின் நட்பைத் துண்டிப்பீர்கள். குரு பகவான் 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வழக்குகள் இழுபறியாகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குரு பகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். எனினும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். ஆரோக்கியம் கூடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் ஒரு புண்யாதிபதியும், ஜீவனாதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் செல்வதால் எடுத்த காரியங்கள் வெற்றியடையும். வீடு, மனை வாங்குவதற்கு முன் பணம் தருவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். திடீர் யோகங்கள் உண்டு. ராகு நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் செல்வதால் சின்ன சின்ன தடங்கல்கள் இருக்கும். பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இரவு நேர பயணங்களை தவிர்க்க பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வரும். உங்களுடைய ஆறாவது வீட்டுக்கும், ஒன்பதாவது வீட்டுக்கும் உரியவராகிய குரு பகவான் தன்னுடைய நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 1.6.26 வரை செல்வதால் எல்லா வகையிலும் வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். இருந்தாலும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்களில் எந்த முதலீடும் செய்ய வேண்டாம். கோயில் விழாக்களை முன் நின்று நடத்துவீர்கள். பிள்ளைகளுக்கு நல்லது நடக்கும். அரைகுறையாக நின்று போன வீடு கட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் தடைபட்ட வேலைகள் முடியும். அலர்ஜி, தொண்டைப் புகைச்சல், மூச்சுப்பிடிப்பு வந்து போகும்.
வியாபாரத்தில் தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருள்களால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில், பங்குதாரர்கள் சிலர் தங்களின் பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள்.
உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என ஆதங்கப்படுவீர்கள். கணினி துறையினருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாகக் கிடைக்கும். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவு கிட்டும்.
இந்த குரு பெயர்ச்சி அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும்.
பரிகாரம்: மதுரை - சோழவந்தான் அருகே குருவித்துறையில் வீற்றியிருக்கும் ஸ்ரீகுருபகவான், சித்திர ரத வல்லப பெருமாள், செண்பகவள்ளித் தாயாரை வியாழக்கிழமைகளில் வழிபடுங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உணவு, உடை வாங்கிக் கொடுங்கள். தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.