துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025
Updated on
2 min read

துலாம்: நுண்ணறிவும், பேச்சு சாதுர்யமும் கொண்ட நீங்கள், நாடி வருவோருக்கு இயன்ற உதவிகளைச் செய்வதில் வல்லவர்கள். உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) மே 14 முதல், 9-ம் இடத்தில் அமர்ந்து குருபகவான் பலன் தரப்போகிறார். இதுவரை பல விஷயங்களில் இருந்து ஒதுங்கியிருந்தவர்கள், இனி வெளிச்சத்துக்கு வருவார்கள். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.

குடும்பத்தில் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இதுவரை வாடகை வீட்டில் இருப்போர், சொந்த வீட்டில் குடியேறும் வாய்ப்பு உண்டாகும். மகனுக்குத் தள்ளிப் போய்க் கொண்டிருந்த திருமணம், இப்போது கூடி வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: ராசியை குரு பார்ப்பதால், சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியம் மிகச் சிறப்பாக அமையும். தோற்றப் பொலிவு கூடும். தயக்கம் தடுமாற்றம் எல்லாம் நீங்கும். கையில் பணம் புரளும். வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். 3-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், சொத்துச் சேர்க்கை உண்டு. எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பலருக்கும் நகை, ஆபரணங்கள் சேரும். செய்தொழிலில் இருந்து வந்த கடின நிலைகள் மாறும்.

5-ம் இடத்தை குரு பார்வையிடுவதால், வெகு காலமாக பிள்ளைப் பாக்கியத்துக்காகக் காத்திருந்த அன்பர்களுக்கு, பிள்ளைப் பேறு கிடைக்கும். பிள்ளைகளால் ஆதாயம், பெருமை வந்து சேரும். வட்டிக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகன வசதி பெருகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களுடைய தன, சப்தமாதிபதியான செவ்வாய் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் பயணிப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். விவாதங்கள் குறையும். வழக்குகள் சாதகமாகும். புது நகைகள் வாங்குவீர்கள். பிள்ளைகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.
ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் பயணிப்பதால் பூர்வீக சொத்து விவகாரம் சாதகமாக முடியும். பிள்ளைகளுக்கு வெளிநாட்டு அல்லது வெளி மாநிலங்களில் வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும்.

உங்களுடைய தைரிய ஸ்தானத்துக்கும், ரோக ஸ்தானத்துக்கும் உரிய குரு பகவான் அவருடைய நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் ரொம்ப நாளாக இழுபறியாக இருந்து வந்த நீதிமன்ற வழக்கு, சாதகமாக முடியும். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். கால் வலி, கழுத்து வலி விலகும். ஆரோக்கியம் கூடும். எல்லாவற்றிலும் வெற்றி உண்டு.
குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். பிள்ளைகளின் போக்கில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.

வியாபாரத்தில், பெரிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களைத் திகைக்கச் செய்வீர்கள். அனுபவசாலிகளைப் பணியில் அமர்த்துவீர்கள். எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களுடனான கருத்து மோதல்கள் நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.

உத்தியோகத்தில், பதவி உயர்வு தேடி வரும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். மேலதிகாரி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் தருவார். யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கணினித் துறையினருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்குப் புது சலுகைகள் கிடைக்கும். நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள். கலைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். அரசு சார்பில் விருதுகள் கிடைக்கும்.

இந்த குரு பெயர்ச்சி எல்லா வகையிலும் வெற்றியையும், மகிழ்ச்சியையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசலில் அருள்பாலிக்கும் விருத்தபுரீஸ்வரர், பெரியநாயகி அம்மன், தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் வணங்கிவிட்டு வாருங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். எல்லாவகையிலும் முன்னேற்றமுண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in