நிகழும் மங்களகரமான பராபவ வருடம், சித்திரை மாதம் 1ம் தேதி 14.04.2026 செவ்வாய்க் கிழமை கிருஷ்ண பட்சத்து, துவாதசி திதி, மேல்நோக்குள்ள சதயம் நட்சத்திரம், சுப்பிரம் நாம யோகம், கௌலவம் நாமகரணத்தில், நேத்திரம், ஜீவனம் நிறைந்த மந்த யோகத்தில் பஞ்ச பட்சியில் மயில் அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் வேலையில் காலை மணி 9.32-க்கு, சூரிய உதயாதி நாழிகை 8.26-க்கு ரிஷப லக்னம், சிம்மம் நவாம்சத்திலும், புதன் ஹோரையில் ராகு திசையிலும் இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.
“மிக்க பராபவத்தன் மேதினியிற்பின் மழையாம்
தக்கபசுக்கடழைக்குமே - இக்குப்
பலிக்காது நான்குவகைப் பல்லுயிர்க்குமின்பம்
கலிக்காதெனவே கருது.”
- என்ற இடைக்காடர் சித்தரின் பாடலின்படி இந்தப் பராபவ வருடத்தில் பிற்பகுதியில் மழை உண்டு. பசுக்கள் செழித்து பால் வளம் பெருகும். அனைத்து தரப்பு மக்களும் செல்வச் செழிப்புடன் வாழ்வர். எல்லா உயிர்களும் நோய் நொடிகளின்றி இன்பமாக வாழும் என்கிறார்.
இந்த வருடத்தில் ராஜாவாக குரு வருவதால் ஆன்மிகம் தழைத்தோங்கும், பிரார்த்தனைகள், பூஜைகள் என வழிபாடுகள் அதிகரிக்கும். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வங்கிகளில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வருவர். மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். மந்திரியாக செவ்வாய் வருவதால் தீ விபத்துகள், மின் கசிவு விபத்துகள் அதிகரிக்கும். காடுகள் அழியும். சில இடங்களில் வறட்சி ஏற்படும்.
சேனாதிபதியாக சந்திரன் வருவதால் உலகெங்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அவர்களின் கை மேலோங்கும். முக்கிய பதவிகளில் அமர்வார்கள். பாரம்பரிய முறையில் விவசாயம் தழைக்கும், பசி பட்டினி தீரும். மேகாதிபதியாகவும் சந்திரன் வருவதால் ஏற்றுமதி இறக்குமதியில் முன்னேற்றம் உண்டு. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் படிப்படியாக குறையும். ஆறு, குளங்களை தூர்வாரி சுத்தம் செய்வர். நீர் நிலைகளில் சேமிப்பு அதிகரிக்கும்.
அர்க்காபதியாகவும் சந்திரன் வருவதால் மகசூல் பெருகும். விளைச்சல் ரெட்டிப்பாகும். விவசாயிகள் லாபம் அடைவார்கள். சாயாதிபதியாகவும், நிரகாதிபதியாகவும் குருபகவான் வருவதால் மஞ்சள் நிறப் பொருட்கள் அதிகரிக்கும். உலகளவில் தங்கத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்த பராபவ வருடம் ரிஷப லக்னத்தில் பிறந்திருப்பதுடன் - லக்னாதிபதி சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மக்களிடையே சேமிப்பு குறையும். விரயச் செலவுகள் கூடும். கார்களின் உற்பத்தி அதிகமாகும். மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
குருவும், புதனும் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் புதன் பூமிகாரகன் செவ்வாயுடன் சேர்ந்திருப்பதாலும் நிலங்களின் விலை உயரும். பலரும் சொந்தமாக வீடு கட்டுவார்கள். பத்தாமிடத்தில் சந்திரனுடன் ராகு இருப்பதால் வேலைவாய்ப்பு குறையும். பழமையான தொழிற்சாலைகள் மூடப்படும். சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் வாகன விபத்துகள் அதிகரிக்கக் கூடும். முடிந்தவரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சூரியன் மறைந்து இருப்பதால் மாரடைப்பு, இதய அறுவை சிகிச்சை என அதிகரிக்கும்.
வருடத்தின் பிறப்பு ஜாதகத்தில் 7-க்கு உரிய செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பல வருடங்களாக தள்ளிப் போன திருமணம் இந்த வருடத்தில் நடக்கும். திருமண மண்டபங்கள் நிறையும். திருமண மண்டபங்கள் அதிகரிக்கும். குரு பகவான் 2-ம் வீட்டில் நிற்பதால் மருத்துவத் துறை நவீன மயமாகும். புது வகை மருந்துகளும், அறுவை சிகிச்சைகளும் நோயாளிகளை காப்பாற்றும்.
ஆரோக்கியமடைவர். வெளிநாட்டில் முதலீடு செய்தவர்கள் நஷ்டம் அடையலாம். பாக்யாதிபதி சனி பகவான் வலுத்திருப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பு இனி உயரும். வெளி நாட்டு வியாபாரம் சூடு பிடிக்கும். ஏற்றுமதி இறக்குமதியில் நல்ல லாபமடைவார்கள். சந்திரனை குரு பார்ப்பதால் விவசாயத்தில் ஆர்வம் பிறக்கும். உற்பத்தி அதிகரிக்கும். ஜவுளி, இரும்பு தொழில்கள் விருத்தி அடையும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மக்கள் கோயில்களுக்கு அதிகம் செல்வார்கள். அதிக அளவில் கும்பாபிஷேகங்கள் நடக்கும்.
வருடம் பிறக்கும்போது செவ்வாயும், சனியும் சேர்ந்து இருப்பதால் இமயமலைப் பகுதிகளில் அதிக அளவில் மழை பொழியும். நிலச்சரிவும் ஏற்படலாம். ஏ.ஐ-யால் உண்மைக்கு புறம்பான விஷயங்கள் திரிக்கப்படும். பொய்மையான விஷயங்கள் வளர்ச்சி அடையும். விளையாட்டுத் துறை வளர்ச்சி அடையும். உலகெங்கும் இந்திய வீரர்கள் சாதித்துக் காட்டுவார்கள். இந்த வருடம் முழுவதும் சனி பகவான் மீனத்திலேயே அமர்ந்திருப்பதால் கடலில் கப்பல்கள் மூழ்கடிக்கப் படலாம். வான் எல்லை, கடல் எல்லை சம்பந்தப்பட்ட போர்கள் அதிகரிக்கலாம்.
வருடம் பிறப்பு ஜாதகத்தில் சூரியனும், சுக்கிரனும் 12-ல் மறைந்திருப்பதால் கண் வலி, பார்வைக் கோளாறால் மக்கள் பாதிப்படைவார்கள். குருபகவான் நிலையில்லாமல் இருப்பதால் போர், மழை வெள்ளத்தால் உலகெங்கும் அதிகம் பேர் பாதிப்பு அடைவார்கள். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும். இந்த பராபவ வருடம் ஆடம்பர செலவுகளையும், மருத்துவ செலவுகளையும் அதிகமாக்கி மக்களின் சேமிப்பை கரைப்பதாக அமையும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.