

அன்பை எப்போதும் அளந்து பார்க்காதீர்கள்.. உணர்ந்து பாருங்கள் என்பதை உணர்ந்து அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்தும் கும்ப ராசிக்காரர்களே!
உங்கள் ராசியிலேயே இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் ஆளுமைத் திறன் வெளிப்படும். எதையும் யோசித்து முடிவெடுப்பீர்கள். முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு இப்போது வாரிசு உருவாகும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப் பற்றாக்குறை அகலும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காமால் நீங்களே முன்னின்று முடிக்கப் பாருங்கள். விலகிப் போன உறவினர்கள் இனி உங்கள் வீடு தேடி படையெடுப்பார்கள்.
குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குரு பகவான் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அதிகார பதவியில் இருப்பவர்களில் நட்பு கிட்டும். முயற்சிகளில் வெற்றியுண்டு. அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். விலையுயர்ந்த நகைகள் வாங்குவீர்கள். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு 6ம் வீட்டுக்கு செல்வதால் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர்கள். அரசு வேலைகளில் இழுபறி நிலை ஏற்படும். 31.10.26 முதல் 25.01.27 வரை அதிசாரமாக குரு பகவான் 7ம் வீட்டுக்கு செல்வதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சுமுகமாக பேசி முடிப்பீர்கள். அரசு காரியங்கள் முழுமையடையும்.
ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராசிக்குள் ராகுவும், கேது 7ம் வீட்டிலும் தொடர்வதால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனைவியுடன் வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 12ம் வீட்டுக்கும், கேது 6ம் வீட்டுக்கும் வருவதால் வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசாங்க வேலைகள் முழுமையடையும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். குல தெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: ராசிக்கு 2ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் வருங்காலத்துக்காக சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். எதார்த்தமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். அதே சமயம் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். யாருக்காகவும் பொறுப்பேற்று ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். யோகா, நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. இல்லத்தரசிகளுக்கு சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவரின் ஆதரவு கிட்டும். சிலர் வீட்டில் இருந்தபடியே சுய தொழில் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
கன்னிப் பெண்களுக்கு தள்ளிப் போன கல்யாணம் கூடிவரும். மாதவிடாய்க் கோளாறு, கனவுத் தொல்லைகள் விலகும். பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைவர். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. சிலர் கடையை விரிவுபடுத்துவார்கள். பழைய வாடிக்கையாளர்களை மீண்டும் வரவழைக்க அதிரடி சலுகைகளை அறிவிப்பீர்கள்.
தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, பால் வகைகள், தானிய வகைகளால் அதிக லாபம் உண்டு. அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்களை மாற்றிவிட்டு அனுபவம் மிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
உத்தியோகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. பெரிய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களிடம் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். கணினி துறையினருக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எனினும் அதற்கேற்ப சம்பளமும் உயரும்.
வெளிநாட்டு வாய்ப்புகளும் தேடி வரும். கலைத் துறையினருக்கு புது நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். மூத்த கலைஞர்களை விமர்சித்து பேச வேண்டாம். பரிசும், பாராட்டும் கிடைக்கும். மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டு மதில்மேல் பூனையாக நிற்கும் உங்களை தெளிவாக முடிவெடுத்து திடமாக செயல்பட வைக்கும்.
பரிகாரம்: திருநெல்வேலியில் இருந்து மேற்காக 4 கி.மீ தொலைவில் பாவூர்சத்திரம் உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ அருகே சுரண்டை செல்லும் வழியில் கீழப்பாவூரில் உள்ள லட்சுமி நரசிம்மரை இளநீர், பால் அபிஷேகம் செய்து வணங்குங்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.