

உன்னை நம்பியவர்களுக்கு உயிராய் இரு.. உன்னை வெறுப்பவர்களுக்கு உதாரணமாக இரு என்பதை உணர்ந்து சிந்தித்து செயல்படும் தனுசு ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு 3-வது ராசியில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் யாவும் பூர்த்தியாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். உங்களின் தோற்றப் பொலிவு கூடும். பணப் பற்றாக்குறையால் அவதிப்பட்ட உங்களுக்கு, பெரிய கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பழைய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும்.
குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குரு பகவான் 7ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கையில் பணம் புரளும். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு 8ம் வீட்டுக்கு செல்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நேரம் தவறி சாப்பிடாதீர்கள். வீண் விமர்சனங்களை தவிர்க்கவும். 31.10.26 முதல் 25.01.27 வரை அதிசாரமாக குருபகவான் 9ம் வீட்டுக்கு செல்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். அரைகுறையாக நின்றுபோன வீட்டை முழுமையாக கட்டி முடிப்பீர்கள்.
ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 3ம் வீட்டிலும், கேது 9ம் வீட்டிலும் தொடர்வதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் பண வரவால் அடகில் வைத்த நகையை மீட்பீர்கள். நவீன எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்குவீர்கள். 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 2ம் வீட்டுக்கும், கேது 8ம் வீட்டுக்கும் வருவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். தன்னம்பிக்கையுடன் சில காரியங்களை முடிப்பீர்கள். தந்தை வழியில் மருத்துவச் செலவுகள் இருக்கும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.
சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: ராசிக்கு 4ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் புது முயற்சிகளில் வெற்றியுண்டு. பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. பிள்ளைகளால் கொஞ்சம் செலவுகள் இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். சிலர் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வார்கள். புதிய இடத்தில் வீடு வாங்கும் யோகமும் அமையும். பத்திரப் பதிவில் கவனமாக இருக்கவும்.
இல்லத்தரசிகளுக்கு மனப் போராட்டங்கள் ஓயும். குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். உறவினர்களின் விசேஷங்களுக்கு உதவி செய்வீர்கள். கன்னிப் பெண்களுக்கு எதிர்பார்த்த படியே நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கல்லூரித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். மாணவ- மாணவிகளுக்கு மறதி, மந்தம் நீங்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஆசிரியரின் அறிவுரைப்படி நடப்பது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து கொள்முதல் செய்வீர்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு செயல்படுவதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் இனி வசூலாகும். அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். கெமிக்கல், இரும்பு, கடல்சார் உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் அவ்வப்போது மனக் கசப்புகள் வரத்தான் செய்யும். கவலை வேண்டாம். அனைவரையும் அனுசரித்து செயல்படும் கலையை வளர்த்துக் கொள்ளுங்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். தொல்லை தந்த வேலையாட்களை மாற்றுவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களின் கடமையுணர்வை கண்டு மேலதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நீண்ட நாளாக காத்திருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு இப்போது கிடைக்கும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணினி துறையினருக்கு வேறு நல்ல வாய்ப்புகளும் அமையும். கண் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். வரவேண்டிய சம்பள பாக்கியை போராடிப் பெறுவீர்கள். மூத்த கலைஞர்களுக்கு மதிப்பு கொடுக்கவும். மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டு உங்களை கொஞ்சம் உரசி பார்த்து உயர்வு தரும் வருடமாக அமையும். எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: கும்பகோணத்தில் இருந்து (8 கி.மீ) வேப்பத்தூர் வழியாக சூரியனார் கோவில் செல்லும் வழியில் திருவிசநல்லூர் யோக நந்தீஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் சதுர்கால பைரவரை மிளகு தீபமேற்றி வணங்குங்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.