

மரங்கள் கூட இலைகளை இழந்துதான் தன்னை புதுப்பிக்கும். அதுபோல கஷ்டங்கள் வந்தால்தான் வாழ்க்கை புதுப்பிக்கும் என்பதை உணர்ந்த கடக ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் தடைபட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பொருளாதார சூழ்நிலை உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உயர்கல்விக்காக, மகனை வெளிநாடு, வெளி மாநிலங்கள் அனுப்பி வைப்பீர்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குரு பகவான் விரய வீடான 12ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சில சமயங்களில் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு பகவான் ராசிக்குள் வருவதால் பணப் புழக்கம் ஓரளவு இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். 31.10.26 முதல் 25.01.27 வரை அதிசாரமாக குரு பகவான் 2ம் வீட்டுக்கு செல்வதால் பேச்சுத் திறன் அதிகரிக்கும். நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும்.
ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 8ம் வீட்டிலும், கேது 2ம் வீட்டிலும் தொடர்வதால் யாருக்காகவும் பொறுப்பு ஏற்காதீர்கள். கடன் வாங்குவதை தவிர்க்கவும். 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 7ம் வீட்டுக்கும், ராசிக்குள் கேதுவும் வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இளைய சகோதர வகையில் உதவியுண்டு. குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள்.
சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: ராசிக்கு 9ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் புதுப் புது சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் இனி தடபுடலாக நடக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் எதிர்பாராத ஆதாயம் உண்டு. பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணி முழுமையடையும். இல்லத்தரசிகளுக்கு மனக் குழப்பம், டென்ஷன் குறையும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.
கன்னிப் பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஆலோசனையை கேட்டு செயல்படுங்கள். மாணவ-மாணவிகளுக்கு அலட்சியம், மறதி விலகும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் போட்டியா ளர்களை சமாளிக்கும் அளவுக்கு அதிரடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். அதிரடியான லாபமும் உண்டு. பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. வாகன உதிரிபாகங்கள், ரியல் எஸ்டேட், ஹோட்டல் வகைகளால் லாபமடைவீர்கள்.
பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய ஆர்டர், ஒப்பந்தங்களை கைப்பற்றுவீர்கள். உத்தியோகத்தில் வெகுநாட்களாக தடை பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி உங்களைத் தேடி வரும். கணினி துறையினர் அதிக நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு பெரிய நிறுவனத்திடமிருந்து வாய்ப்புகள் வரும். மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, வளைந்து கொடுத்து போவதாலும் கடின உழைப்பு மற்றும் தொலைநோக்கு சிந்தனையாலும் வெற்றி தரும்.
பரிகாரம்: வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் வழியில் 14 கி.மீ தூரத்தில் அருள்பாலிக்கும் ரத்தினகிரி ஸ்ரீ பால முருகனை பால் அபிஷேகம் செய்து வணங்குங்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.