Published : 01 Dec 2017 09:48 AM
Last Updated : 01 Dec 2017 09:48 AM

மிகப் பெரிய ‘வசாங்-15’ ஏவுகணையின் புகைப்படம், வீடியோக்கள் வெளியிட்ட வடகொரியா

கடந்த ஜூலை மாதம் வசாங் - 14 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்து பார்த்தது. நேற்று முன்தினம் அதை விட சக்திவாய்ந்த வசாங் -15 என்ற ஏவுகணையை சோதனை செய்தது. இந்த ஏவுகணையின் 12-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வடகொரியா நேற்று வெளியிட்டது.

அவற்றை ஆய்வு செய்த பல நாட்டு நிபுணர்கள், முன்பை விட அதிக சக்தி வாய்ந்த மிகப்பெரிய ஏவுகணை என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

வசாங் - 15 ஏவுகணை வானில் 4,475 கி.மீ. தூரம் செங்குத்தாக பாய்ந்து சென்று பின்னர் 53 நிமிடங்களில் 1000 கி.மீ. தூரம் சென்று ஜப்பான் கடலில் விழுந்துள்ளது. இதுகுறித்து தென் கொரிய முப்படை தளபதியின் செய்தித் தொடர்பாளர் ரோ ஜே செயான் கூறும்போது, ‘‘புகைப்படங்களைப் பார்க்கும் போது வசாங் -14 ஏவுகணையை விட வசாங் 15 ஏவுகணை மிகப்பெரியது என்பது தெளிவாக தெரிகிறது’’ என்றார்.

அணுஆயுதங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் மைக்கேல் டூயிட்ஸ்மேன் கூறும்போது, ‘‘மிகப்பெரிய ஏவுகணைகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் சில நாடுகளில் மட்டுமே உள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் சேர்ந்துள்ளது’’ என்றார். திட எரிவாயுவில் இயங்க கூடிய வசாங்-15 ஏவுகணை மூலம் மிக விரைவில் தாக்குதல் நடத்த முடியும். எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தி உள்ளது. - ராய்ட்டர்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x