Published : 09 May 2024 11:41 AM
Last Updated : 09 May 2024 11:41 AM

நாய்கள் வளர்க்க உரிமம் பெறுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னை: நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் கிடையாது. அதனால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் ராதாகிருஷ்ணன், “நாய்கள் வளர்க்க உரிமம் பெறுவது கட்டாயம். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் கிடையாது. அதனால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படும்.

அனைத்து தரப்பினரும் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும். விலங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியாது. மதுரைக்கு அப்புறப்படுத்தப்பட்ட ராட்வீலர் நாய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தை உரிய சட்டப்பிரிவுகள் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாய் கடிக்கு ஆளான குழந்தைக்கு இன்று மதியத்துக்கு மேலாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுமியின் உடல்நிலை குறித்து பல தவறான தகவல் பரப்பப்படுகிறது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் கடிக்கு ஆளான குழந்தைகளைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. நாய் கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.” என்றார்.

முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, 4-வது லேன் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடந்த 5-ம் தேதி இரண்டு நாய்கள் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பலத்த காயமடைந்த அச்சிறுமி ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை நாய் கடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் தான் நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி செயல்பாடு சரியாக உள்ளது: அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி செயலிழந்தாக கூறுவதில் உண்மையில்லை. வழித்தடத்தில் உள்ள சிசிடிவி மட்டும் பழுதானது அதுவும் உடனடியாக சரிச் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x