

சக்கரமும் மின்சாரமும் நவீன முன்னேற்றங்களுக்கு வித்திட்டன. காலவோட்டத்தில் அதீத மின்னொளியால் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள் ஒன்றாக ஒளிமாசு உருவெடுத்திருக்கிறது.
மிதமிஞ்சிய செயற்கை ஒளி உமிழ்வு, இருள் படர்ந்திருக்க வேண்டிய இரவுகளைச் சிதைத்து சூழலியல் தொகுதிகளைப் பாதித்துவருகிறது. இந்நிலையில், தமது கிராமத்து இரவுகள் இயற்கையின் இருள் போர்த்தியிருக்கப் பெரும்பங்காற்றியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் மாணவர் விபுல் கிராடி.
மகாராஷ்டிரம் நாசிக் மாவட்டத்தில், சுர்கானா மலைப்பகுதியில் உத்மல் பழங்குடி கிராமம் அமைந் துள்ளது. இதுவே மகாராஷ்டிர மாநிலத்தின் முதல், ‘இருண்ட வான சமூகமாக’ விரைவில் அங்கீகரிக்கப்பட இருக்கிறது. இதற்கான விதை 2019இல் போடப்பட்டது.
அப்போது 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த விபுல் கிராடி, புனேவைச் சேர்ந்த, ‘அஸ்ட்ரான்எரா’ (AstronEra) அமைப்பு நடத்திய விண்மீன் நோக்கு தல் நிகழ்வில் முதன்முதலில் பங்கேற்றார்.
இயற்கை வரம்
அந்த இரவின் விண் மீன்கள் அவர் மனத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து ‘அஸ்ட்ரான்எரா’ அமைப்பின் வானியல் நிகழ்வுகளில் தன்னார்வல ராகப் பங்கேற்றார். தமது மலைக்கிராமத்தின் இயற்கையான இருண்ட வானை, உலக விண்வெளி சுற்றுலா வரைபடத்தில் சேர்க்கும் சாத்தியம் அவருக்கு நாளடைவில் வாய்ந்தது.
அதற்குத் தங்களின் கிராமம் நவீனத்தின் பின்னால் ஓடாமல், ஒய்யாரமாகக் கானகத்தின் இருளைக் காப்பதே உன்னதம் என்பது புலப்பட்டது. இது பற்றிவீடுவீடாகச் சென்று கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடக்கத்தில் கிராம மக்கள், இந்தத் திட்டத்தால் தங்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுமோ என அஞ்சினர். ஆனால், நட்சத்திரங்களைப் பாதுகாப்பதற்கான புத்திசாலித்தனமான திட்டம் இது என்பதை விளக்கி அவர்களின் ஆதரவை விபுல் பெற்றார்.
அநாவசியமான மின்விளக்குகளின் பயன் பாட்டை ஊர் மக்கள் குறைக்கவே, உத்மல் கிராமத்தின் வானம் நள்ளிரவில் அப்பழுக்கற்ற நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றால் மின்னியது. தற்போது, 22 வயது நிரம்பிய இயற்பியல் பட்டதாரியான விபுல் தனது கனவை நிஜமாக்கி இருக்கிறார்.
முன்மாதிரி வளர்ச்சி
நாசிக் மாவட்ட நிர்வாகம், சர்வதேச இருண்ட வான் சான்றிதழ் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், கருவிகளை வாங்குவதற் காக மாவட்டத் திட்டக்குழு மூலம் ரூ. 42 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
உத்மல் கிராமத்தில் தொலைநோக்கிகள், வானின் தரத்தை அளவிடும் கருவிகள், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம், கிராம மக்கள் சொந்த ஊரைவிட்டு வெளியேறாமல் ‘விண்வெளி சுற்றுலா’ (Astro-tourism) மூலமாகப் பொருளாதார முன்னேற் றம் அடைய முடியும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.
அதைவிட, அறிவியல்பூர்வமாக உள்ளூர்ப் பண்பாட் டைப் பாதுகாத்து முன்மாதிரியான வளர்ச்சியை எட்ட முடியும் என்பது உலகுக்கு நிரூபணமாகி இருக்கிறது.