

பழத் தோட்டம், அழகு மலர்கள், காய்கறித் தோட்டம், மூலிகைகள், தென்னை சாகுபடி எனப் பலவகைப் பயிர்களுடன் 18 ஏக்கரில் பிரம்மாண்டமாகத் தோற்றமளிக்கிறது ‘வி2எம் ஆர்கானிக் ஃபார்ம்ஸ்’ (V2M Organic Farms). திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையிலிருந்து சத்தியவேடு செல்லும் சாலையில் உள்ள எருக்குவாய் ஊராட்சிக்குட்பட்ட மணலி கிராமத்தில் இந்த முன்மாதிரி வேளாண் பண்ணை அமைந்திருக்கிறது.
ஒரு பண்ணையில் இத்தனை பயிர் வகைகளா என வியப்பில் ஆழ்த்தும் வகையில் பலபயிர் சாகுபடிக்கான ஒரு முன்மாதிரி பண்ணையாக இதனை உருவாக்கியிருக்கிறார் 53 வயதான கே. பீனா நிர்மல். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், சுமார் பத்தாண்டு காலம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியவர். விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக ஆசிரியர் பணியில் இருந்து விலகி, இன்று மிகச் சிறந்த வேளாண் பண்ணையாளராக உருவெடுத்துள்ளார்.
மாற்றத்தின் தொடக்கம்: இந்தப் பண்ணையின் உருவாக்கக் கதையை ‘இந்து தமிழ் திசை’ வாசகர்களுக்காக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். “2010இல் 18 ஏக்கர் கொண்ட இந்தப் பண்ணையை வாங்கியபோது, நிலம் முழுவதும் தைல மரங்கள் நிறைந்து அடர்ந்த காடு போல இருந்தது. பொதுவாக வேறு எதுவும் விளையாத பூமியில்தான் தைல மரங்களை வளர்ப்பார்கள்.
ஆனால், அருகாமையில் எள், கடலை சாகுபடி செழிப்பாக நடைபெறுவதைப் பார்த்ததும், இந்த நிலத்தையும் வளங்கள் நிறைந்த தோட்டமாக மாற்ற வேண்டும் என்று உறுதியெடுத்தோம். தைல மரங்களை முழுமையாக அகற்றுவதற்கே எங்களுக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தன.
அதன் பின்னர் நிலத்தைப் பண்படுத்தி நெல்லும் எள்ளும் தர்ப்பூசணியும் சாகுபடி செய்தோம். எனினும் மற்றவர்களைப் போல வழக்கமான விவசாயம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை.
அந்தத் தருணத்தில்தான் பலவகைப் பயிர்கள் நிறைந்த ஒரு மாதிரிப் பண்ணையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக நிலத்தை மேம்படுத்தி, இன்றைய கட்டத்தை எட்டியுள்ளோம். இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது” என்று புன்னகையுடன் தெரிவித்தார் பீனா நிர்மல்.