Published : 23 Aug 2022 12:45 PM
Last Updated : 23 Aug 2022 12:45 PM

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி நியூஸிலாந்து சாதனை

பிரிட்ஜ்டவுன்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. கடந்த 37 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த தொடரில் நியூஸிலாந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரை நியூஸிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. முதல்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும்,2-வது போட்டியில் நியூஸிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இந்நிலையில் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசிஆட்டம் நேற்று முன்தினம் பார்படோஸின் பிரிட்ஜ்டவுன் நகரிலுள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 110 பந்துகளில் 105 ரன்கள் குவித்தார். கேப்டன் நிக்கோலஸ் பூரன் தன் பங்குக்கு 55 பந்துகளில் 91 ரன்கள் அதிரடியாகச் சேர்த்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 51 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்களில் அல்சாரி ஜோசப் மட்டும் 6 பந்துகளில் 20 ரன்களைக் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் விரைவில் ஆட்டமிழந்து விட மற்றொரு தொடக்க வீரரான மார்ட்டின் கப்டில் 64 பந்துகளில் 57 ரன்களைக் குவித்தார். பின்னர் வந்த டெவான் கான்வே 56 ரன்களும், கேப்டன் டாம் லதாம் 69 ரன்களும், டேரில் மிட்செல் 63 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

மைக்கேல் பிரேஸ்வெல் 14 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம் 11 பந்துகளில் 34 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

47.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களைக் குவித்து நியூஸிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடந்த 37 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஒரு நாள் தொடரை நியூஸிலாந்து முதல்முறையாகக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ஆட்ட நாயகன் விருதை டாம் லதாமும், தொடர்நாயகன் விருதை மிட்செல் சான்ட்னரும் கைப்பற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x