Published : 23 Aug 2022 12:32 PM
Last Updated : 23 Aug 2022 12:32 PM

பில்கிஸ் பானோ வழக்கு | 11 பேர் விடுதலையை எதிர்த்து மனு; உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

பில்கிஸ் பானோ வழக்கில் 11 பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானோ என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகி ஆயுள் தண்டனை பெற்றவர்களை அண்மையில் குஜராத் அரசு விடுதலை செய்தது.

பொதுநல வழக்கு: இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மற்றும் மேலும் ஒருவர் தாக்கல் செய்த பொது நல மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இதனைத் தெரிவித்தது.

சுபாஷினி அலி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மஹூவா மொய்த்ரா சார்பில் வழக்கறிஞர் அபிஷே சிங்வி மற்றும் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியதை எதிர்த்து வழக்கறிஞர் அபர்ணா பட் ஆகியோரின் முறையீட்டை பரிசீலித்து நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

என்ன நடந்தது? - 2002-ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவகர்கள் 59 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக சிறும்பான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகினர். தங்களது இருப்பிடத்திலிருந்து தப்பித்து வேறு இடங்களுக்குச் சென்றனர். இதில் 2002 , பிப்ரவரி 27-ல் பில்கிஸ் பானோ என்ற 5 மாத கர்ப்பிணியும் தனது குடும்பத்துடன் தனது கிராமத்திலிருந்து தப்பித்துச் சென்றார். பின்னர் சாலையில் ஷில்டர் அமைத்து தங்கிக் கொண்டிருந்த பில்கிஸ் பானோவின் குடும்பத்தை ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கியது. இதில் பில்கிஸின் மகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். கர்ப்பிணியான பில்கிஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

விடுதலை பின்னனி: பில்கிஸ் பானோ கூட்டு வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று நிரூபணம் செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளில் ஒருவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தல்படி, 11 பேரையும் விடுவிப்பது தொடர்பாக குஜராத் அரசு சார்பில் பாஜ்மஹால் நகர கலெக்டர் சுஜல் மைத்ரா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அதில் சுஜல் மைத்ரா கூறும்போது, “இவ்வழக்கில் 11 குற்றவாளிகளையும் விடுவிக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த பரிந்துரை மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு, அவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு கிடைத்தது” என்றார்.

சுஜல் மைத்ரா தலைமையிலான இக்குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 11 பேரையும் சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது. பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் ஏற்கெனவே 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளனர் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், பில்கிஸ் பானோ வழக்கில் 11 பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x