Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

புயல் குறித்த ஆய்வுக்கு மத்தியக்குழு டிச.5-ல் வருகை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் இருந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் கருவிகளை பார்வையிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். படம்:எல்.பாலச்சந்தர்

ராமேசுவரம்

புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு டிச.5-ம் தேதி தமிழகம் வர உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

புரெவி புயல் பாம்பன்-கன்னியாகுமரி இடையே இன்று கரையைக் கடக்கும் என்பதால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், எம்எல்ஏக்கள் எம்.மணிகண்டன், என்.சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் முனியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயலை எதிர்கொள்ளும் வகையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தென் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி புரெவி புயல் வலுவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்று 85 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். கடல் சீற்றம், கொந்தளிப்பு இருக்கும். புயல் கரையைக் கடந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

பொதுமக்களுக்கு உதவ இந்தியக் கடற்படை, கடலோர ஹெலிகாப்டர்கள் தயார்நிலையில் உள்ளன. நிவாரண முகாம்களில் முகக்கவசம் இன்றி யாரையும் அனுமதிக்கக் கூடாது. தற்போது புயலுடன் கரோனா பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

புரெவி புயல் நாளை (டிச.3) காலை 11-12 மணியளவில் பாம்பன் பகுதியில் மையம் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மீனவர்கள் நூறு சதவீதம் கரை திரும்பி விட்டனர். மொத்த கண்மாய்கள் 1,763. இவற்றில் 10 மட்டும் 100 சதம் நிரம்பியுள்ளது. 3,987 ஊருணிகளில் 207-ல் 100 சதவீதம் நீர் நிரம்பியது. மாவட்டத்தில் பாதிக்கப்படும் பகுதிகளாக 37 இடங்களும், 180 கடற்கரை கிராமங்களும் என 217 பகுதிகள் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்

தமிழகத்தில் 117 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் ராமநாதபுரத்தில் 23 மையங்கள் உள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் தங்கச்சிமடம் மற்றும் மண்டபத்திலும், மாநில பேரிடர் மீட்பு படையினர் தொண்டி, சாயல்குடி, பாம்பன் பகுதியிலும் தயார் நிலையில் உள்ளனர்.

புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்தியக்குழு டிச. 5-ல் தமிழகம் வரவுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது போக்குவரத்தை நிறுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்யும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x