

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி கண்ணகப்பட்டு பகுதியில் கடந்த 2008-09-ம் ஆண்டில், ‘நமக்கு நாமே’ திட்டத்தில் ரூ.15.25 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் கட்டப்பட்டது. ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இந்நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சமுதாய நலக் கூடம் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சமுதாய நலக் கூடத்தை திறந்துவைத்தார். பின்னர், மடம் தெரு பகுதியில் கடந்த 2019-20-ம் ஆண்டில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் திறந்துவைத்தார்.
முன்னதாக திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், உரிய விசாரணை செய்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், காஞ்சிபுரம் எம்பி.செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, ஒன்றியக் குழு தலைவர் இதயவர்மன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சு, பரிமளம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.