Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

புதுச்சேரி, தமிழகப் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கைது :

புதுச்சேரி வில்லியனுார் அடுத்துள்ள கீழ்அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரணிதரன்(19).புதுச்சேரி தாகூர் கலை கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த மாதம் 21-ம் தேதி, அதிகாலை கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த தனது மாமா முனியாண்டி என்பவருடன், கடலுார் மீன் மார்கெட்டுக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

உறுவையாறு - அபிஷேகப்பாக்கம் சாலையில் உள்ள அய்யனார் கோவில் அருகே சென்ற போது. 2 மோட்டார் பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், பரணிதரனையும், அவரது மாமன் முனியாண்டியையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன்களை பறித்து சென்றது.

இது குறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் தவளக்குப்பம் அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு புதரில் வழிப்பறி கும்பல் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அக்கும்பலை மடக்கி பிடித்தது. பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அரியாங்குப்பம் மாஞ்சாலை பகுதியை சேர்ந்த ராஜீ (எ) ரமணா (26), நல்லவாடு பகுதியை சேர்ந்த குமரகுரு(19),

தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் விஷ்ணு(19), அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (19), ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை கிராமத்தைச் சேர்ந்த ஜெயமூர்த்தி (எ) சேகர்(21). அதே பகுதியை சேர்ந்த அர்ஜுன் (எ) ஆனந்து(20), கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஏழுமலை (எ) கொத்து(19), வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார்(21) ஆகியோர் என்பதும், தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த கும்பல் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 10 செல்போன்கள், 4 மோட்டார் பைக்குகள், ரூ.3 ஆயிரம் பணம், கம்ப்யூட்டர் மானிட்டர், கண்காணிப்பு கேமரா, 2 கத்தி, வெள்ளி கைச்சங்கிலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மொத்தமதிப்பு சுமார் ரூ.3 லட்சமாகும்.

பின்னர் வழிப்பறி கும்பலை கரோனா பரிசோதனைக்கு பின்னர் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x